சிலம்பு நெறி ☐ 33
பூம்புகாரில் செல்வக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்த கோவலன் நாட்டின் சூழ்நிலையால் பாதிக்கப் பெற்றவனாகி, வாழ்வதற்காக மதுரைக்கு வருகின்றான். “வாழ்தல் வேண்டி ஊழ்வினை துறப்பச் சூழ்கழல் மன்னா நின்னகர்ப்புகுந்த” என்பது கண்ணகியின் வாய்மொழி.
வாழ்கிறவர்களை வாழ்விப்பதுதான் நல்ல அரசு. ஒருவருடைய வாழ்வுரிமையைப் பறிக்க யாருக்கும் உரிமையில்லை. ஆனால், கோவலன் உயிர், பாண்டியப் பேரரசால் பறிக்கப் பெற்றது. கோவலன் கொலையால் ஆற்றொணாத் துயரத்தைக் கண்ணகி அடைந்தாள் என்பது உண்மை.
ஆயினும் கண்ணகியை மிகுதியும் வருத்திய துன்பம் கோவலன் கொலை -யுண்டதன்று. கோவலனைக் கொலை செய்யச் சொல்லப்பட்ட காரணத்தில் தான்! அதாவது ‘கள்வன்’ என்ற குற்றச்சாட்டின் மீது கொல்லப் பெற்றதுதான்!
கள்வர்கள், மற்றவர்களைக் கள்வராக்கிக் கொள்ளும் முறை அன்றும் இருந்திருக்கிறது. இன்றும் இருக்கிறது. இது நெறிமுறை பிறழ்ந்த நிலை. களவு, பொய்ம்மை, ஆராயாமை, அறியாமை, கொலை ஆகிய பல குற்றங்கள் கோவலன் கொலையின் மூலம் தெரிய வருகின்றன.
இத்தகு குற்றங்கள் தெய்வ நம்பிக்கையுடையவர்களிடத்தில் இருப்பதற்கில்லை; தெய்வம் உள்ள இடத்தில் இருக்காது; பழிசுமந்த கொலைகள் இருத்தற்கில்லை. இது இளங்கோவடிகள் நம்பிக்கை! கண்ணகியின் நம்பிக்கை! ஆனால், மதுரையின் நடப்பு முரண்பாடாக இருந்தது.