பக்கம்:சிலம்புநெறி.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிலம்பு நெறி 63

வில்லை. முன்னோர் அமைத்திருந்த வாயில்களும், இயல்பாய் அமைந்திருந்த வாயில்களும் தொடர்ந்து பேணாமையால் தளர்ந்து போயின. கோவலன் விடுதல் அறியா விருப்பினனாக மாதவியிடத்திலேயே தங்கி விட்டான். அவன் செல்வம் தேடும் முயற்சியில் ஈடுபட வில்லை.

ஆயினும், வழிவழியாக வந்ததும், கோவலன் துய்த்து மகிழ்ந்ததுமாகிய, குலப் பெருமை மட்டும், அவனுடைய நெஞ்சை உறுத்துகிறது. அயர்விலா ஆள்வினை யுடையவனாக இருந்திருப்பின், அவன் புகாரில் இருந்தபடியே கூட இழந்த செல்வத்தை ஈட்ட முடியும்.

ஆயினும், அன்று இருந்த சூழ்நிலையில் அவனுடைய செல்வம் செய்யும் முயற்சி, அவனுடைய பழைய தகுதி களுக்கு இசைந்ததாக இருக்கமுடியாது. தம் வழிவழி நிலையிலிருந்து தாழ்ந்துதான்், அவன் செல்வத்தைச் செய்ய வேண்டிய நிலை ஏற்படும். பல்லாண்டுகள் பழகிய அந்தப் பெருமை உணர்ச்சி, அவனிடத்தில் ஊழாகத் தங்கி, உறுத்தி வழி நடத்துகிறது.

கோவலன், தன் நிலை கண்டு வருந்துவதோடு மட்டும் நிறுத்திக் கொண்டு, பெருமை, சிறுமைகளைப் பற்றி கவலைப்படாமல் வாழும் உள்ளம் பெற்றிருப்பானா னால் அவன் புகாரிலிருந்தே பொருளிட்டியிருக்க முடியும்.

கோவலனுக்கு அந்த ஊழ் இல்லை. அதாவது கெட்ட காலத்திலும், வாழும் காலத்திலும், ஒரே மாதிரியான உணர்வினைப் பெறும் இயல்பு அவனிடத்தில் இல்லாமல் ஊழின் ஆற்றலை வலிமைப்படுத்தியது. -

அது மட்டுமல்ல. ஒரு தனி மனிதனுடைய பழக்க வழக்கங்கள், அவன் வாழும் சமுதாயத்தினுடைய, மனப் போக்குகளுக்கு ஏற்றவாறு பெரும்பாலும் அமையும். இதனைச் சமூக ஊழ் என்று கூறினும் கூறலாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிலம்புநெறி.pdf/65&oldid=702728" இலிருந்து மீள்விக்கப்பட்டது