11
இரு பக்கமும் மன்னனுக்கு இரண்டு மங்கையர் கவரி வீசிக் கொண்டிருந்தனர்.
அப்போது வாயில் காவலன் வந்து நெடுஞ்சேரலாதனை வணங்கி, “மன்னர்பிரான் வாழ்க!” என்று சொல்லி நின்றான்.
“என்ன செய்தி ?” என்று கேட்டான் அரசன்.
“யாரோ சோதிடராம். பல மன்னர்களைக் கண்டு சோதிடம் கூறிப் பரிசு பெற்றவராம். மன்னர் பெருமானைக் காண வேண்டுமென்று சொல்லுகிறார்” என்று பணிவுடன் வாயிலோன் சொன்னான்.
“அப்படியா? அவரை உள்ளே அனுப்பு” என்று அரசன் பணித்தான்.
“மன்னர்பிரான் வெல்க!” என்று சொல்லிச் சென்ற வாயிலோன், சிறிது நேரத்தில் அந்தச் சோதிடரைக் கொண்டுவந்து விட்டுத் தன் இடம் சென்றான்.
வந்த சோதிடர் மன்னனை வணங்கித் தாம் கொணர்ந்த பழத்தைக் கையுறையாகக் கொடுத்தார்; பணிவாக நின்றுகொண்டிருந்தார்.
“நீர் சோதிடரா?” என்று கேட்டான் மன்னன்.
“ஆம்” என்றார் அவர்.
“உமக்கு எந்த நாடு ?”
“சோழநாடு.”
“அப்படியே அந்த ஆசனத்தில் அமரும்” என்று சொல்லி ஓர் இடத்தைச் சுட்டிக் காட்டினான் சேர மன்னன். சோதிடர் அதில் உட்கார்ந்து கொண்டார்.