15
இதைக் கேட்ட யாவரும் இரண்டாம் முறை திடுக்கிட்டனர். 'சோதிடர் யார் மூத்த புதல்வர் என்று தெரியாமல் சொல்லிவிட்டாரோ? அல்லது இரண்டாம் புதல்வர் என்று தெரிந்தும் நடக்கப்போவதை ஒளிக்காமல் சொன்னாரோ?'-அவர்களுக்கு இவ்வாறு சிந்தனை ஓடிற்று.
"இவனையா சொல்கிறீர்?" என்று அரசன் இளங்கோவைக் கையால் சுட்டிக் காட்டியபடியே கேட்டான்.
“ஆம், இந்த இளைஞரைத்தான் சொல்கிறேன். வருங்கால மன்னர் இவர்" என்று வற்புறுத்திச் சொன்னார் சோதிடர்.
மற்றவர்கள் யாவரும் கலக்கத்தில் ஆழ்ந்திருந்தார்கள். அரசனும் சற்றே, திகைப்படைந்தான். செங்குட்டுவன் எப்படி இருந்தான்? அவன் கண்கள் சிவந்தன, உடம்பு பதறியது. இப்போதே தன்னோடு தன் தம்பி போரிட்டுத் தோல்வியடையச் செய்து, சிங்காதனம் ஏறியதாக எண்ணிவிட்டானே என்னவோ? அவன் தன் தந்தையை நோக்கினான். அவனுடைய பார்வை, ‘என்ன இது? நீங்கள் யாருக்கு அரசுரிமை வழங்கப்போகிறீர்கள்’ என்று கேட்பதுபோல இருந்தது.
சில கணங்கள் யாவரும் ஒன்றும் பேசத் தெரியாமல் மூச்சும் விடாமல் குழப்பத்தில் ஆழ்ந்தனர்.
அப்பொழுது கணீர் என்று ஒரு குரல் எழுந்தது. இளங்கோவே எழுந்து நின்று, “மன்னர் பெருமானே!” என்று அழைத்த குரல் அது. அரசன்