பக்கம்:சிலம்பு பிறந்த கதை.pdf/34

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

28

இன்னிசை கேட்டது. ஒரு பக்கம் தினைப்புனம் காக்கும் பெண்கள் கிளிகளை ஒட்டிப் பாடும் ஆலோலப் பாடல்கள் கேட்டன. குறவர்கள் ஒரு பக்கம் முழங்கினர். வேறு ஓரிடத்தில் பறையை அடித்து ஒலி பரப்பினார்கள். புலியோடு சிலர் எதிர்த்துப் போராடும் அரவங்கூட ஓரிடத்தில் கேட்டது.

மரத்தின்மேலே பரணைக் கட்டிக் காட்டு விலங்குகளை ஓட்டும் வேடருடைய கூச்சல் ஒரு பக்கம் ஒலித்தது. காட்டு யானைகளைப் பிடிப்பதற்காகக் குழி வெட்டி மேலே கழிகளையும் தழைகளையும் வேடர்கள் பரப்பியிருப்பார்கள். யானைகள் தெரியாமல் அந்தக் குழிகளில் வந்து விழுந்துவிடும். அவற்றைத் தந்திரமாகச் சங்கிலியால் பிணித்துக் கொண்டு வந்து பழக்குவார்கள். இவ்வாறு யானையைப் பிடிப்பவர்கள் போடும் ஆரவாரம் ஒரு பால் எழுந்தது.

இத்தகைய ஒலிகளையும் முழக்கங்களையும் மன்னனும் பிறரும் கேட்டார்கள். காட்டிலே கோங்க மரங்கள் வளர்ந்து நின்றன. அவற்றின் மலர்கள் பொன் தட்டை விரித்தாற் போல அழகாக இருந்தன. வேங்கை மரங்கள் நிறையப் பூத்து நின்றன. அந்த மரங்களின் அடியில் பூக்கள் உதிர்ந்து கிடந்தன. தூரத்திலிருந்து பார்த்தால் ஏதோ வேங்கை ஒன்று அங்கே படுத்துக் கிடப்பது போலத் தோன்றியது. சுரபுன்னை மரங்கள் ஒரு பக்கம் அடர்ந்து வளர்ந்திருந்தன. பெருங்குன்றிமணியாகிய மஞ்சாடி மரங்கள் கொத்துக் கொத்தாகச் சிவந்த வித்துக்களை ஏந்திக்கொண்டு விளங்கின. நன்றாக வயிரமேறிய சந்தன மரங்கள் காடாக ஒரு பக்கம் வளர்ந்திருந்தன.