பக்கம்:சிலம்பு பிறந்த கதை.pdf/42

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

36

இமயமலையிலிருந்தும் கல்லை எடுத்து வரலாம். படிமம் செய்யக்கொணரும் கல்லைச் சில காலம் தூய நீரிலே போட்டுவைக்க வேண்டும் என்பார்கள். இவ்வாறு செய்வதை நீர்ப்படை என்று பெரியோர் கூறுவர். நீர்ப்படைக்குச் சிறந்தவை கங்கையாறும் காவிரியாறும்” என்று அமைச்சன் சொன்னான்.

“அருகிலுள்ள பொதிய மலையிலிருந்து கல்லை எடுத்து வந்து காவிரி நீரில் போட்டுவைக்கும் காரியம், வீரமுடைய குலத்திற் பிறந்தவருக்குப் புகழைத் தருவதன்று. இமயமலைக்கே சென்று பத்தினித் தெய்வத்துக்கு ஏற்ற கல்லை எடுத்து வருவோம். பத்தினி உருவம் வடிப்பதற்கு ஏற்ற கல்லை இமய அரசன் தராவிட்டால், போர் செய்து வீரங்காட்டி வெற்றிமாலை சூடிக் கொண்டு வருவேன்” என்று ஊக்கத்துடன் கூறினான் அரசன்.

அருகில் நின்றிருந்த வில்லவன்கோதை என்னும் அமைச்சன், “மன்னர் பெருமானுடைய வீரத்தை வட நாட்டு மன்னர் யாவரும் அறிவார்கள். ஆதலின், இமயமலையில் கடவுள் உருவைச் சமைக்கக் கல் எடுக்கும் பொருட்டு வருவதாக எல்லா அரசர்களுக்கும் ஓலை போக்க வேண்டும்” என்றான்.

அங்கே இருந்தவர்களில் அழும்பில் வேள் என்ற சிற்றரசரும் ஒருவர். அவர் மன்னனை நோக்கி, “அரசே, ஒவ்வோர் அரசனுக்கும் ஓலை போக்குவதென்பது எளிதில் நிறைவேறாத செயல். காலமும் மிகுதியாக ஆகிவிடும். ஆதலின் அது செய்வது இன்றியமையாததா என்பதை யோசிக்க வேண்டும்" என்றான்