பக்கம்:சிலம்பு பிறந்த கதை.pdf/46

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

40

அவர்கள் சொல்லத் தொடங்கினார்கள்; “திருச் செங்குன்றத்தில் மஞ்சள் பூக்கள் பூத்துக் குலுங்கும் வேங்கை மரம் ஒன்று உண்டு. அதன் அடியில் ஒரு பத்தினி நின்றிருந்தாள். அவள் மார்பு ஒன்றை இழந்த கோலத்தோடு நின்றாள். அப்போது வான விமானத்தில் அமரர்க்கு அரசனாகிய இந்திரன் அவளுடைய கணவனையும் அமரலோகத்திலிருந்து அழைத்து வந்து அவளுக்குக் காட்டி, அவளையும் விமானத்தில் ஏற்றிக்கொண்டு வானுலகு சென்றான். இந்தக் காட்சியை எங்கள் கண்களாலே கண்டோம். மிக மிக வியப்பான காட்சி இது. எங்கும் கண்டதும் இல்லை; கேட்டதும் இல்லை. இதைத் தவமுனிவராகிய தங்களிடம் சொல்லிச் செல்லலாம் என்று வந்தோம்” என்றார்கள்.

இளங்கோவடிகள் மிக்க ஆச்சரியத்துடன், “புலவர் பெருமானே, கேட்டீர்களா? நீங்கள் கேட்ட செய்தியும் இதுதானோ?” என்றார்.

“ஆம்; இதே நிகழ்ச்சியைத்தான் மன்னர் பெருமானும் நானும் கேட்டோம். அந்தப் பத்தினியின் வரலாறு எனக்குத் தெரியும். மதுரையில் நிகழ்ந்தது தானே?” என்றார் புலவர்.

“அப்படியா? நடந்தது என்ன? விரிவாகச் சொல்லுங்கள்” என்று முனிவர் கேட்கப் புலவர் சொல்லலானார்.

“சோழ நாட்டில் உள்ள பூம்புகாராகிய காவிரிப் பூம்பட்டினமே அந்தப் பத்தினித் தெய்வத்தின் ஊர். அவ்வூரில் கோவலன் என்று ஒரு வணிகன் இருந்தான். அவன்தான் இவளுடைய கணவன்.