பக்கம்:சிலம்பு பிறந்த கதை.pdf/64

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

58

வரவேற்றார்கள். படைகளுக்கு வேண்டிய உணவு முதலியவற்றை உதவினார்கள். அவர்களுடைய நாட்டையும் சேரன் படை கடந்து சென்றது. தங்கள் நாட்டின் எல்லைவரையிலும் கன்னர்கள் செங்குட்டுவனுடன் இருந்து வழியனுப்பி வைத்தார்கள். அப்பால் பாலகுமரனென்னும் வேந்தனுக்குரிய நாடு இருந்தது. அதன் எல்லையில் படைகள் பாசறை இறங்கின.

அதனை அறிந்த பாலகுமரன் மக்களாகிய கனகனும் விசயனும் சினந்து எழுந்தார்கள். “நாங்கள் அன்று ஒரு திருமணத்தில் சொன்ன வார்த்தை பலித்துவிட்டது. எங்கள் தோள்வலியை உலகுக்குக் காட்டும் சந்தர்ப்பம் வந்திருக்கிறது. தென்னாட்டிலிருந்து வந்த வேந்தனை எளிதில் வென்று வாகை சூடுவோம்” என்று வஞ்சினம் கூறினர்கள்.

வந்திருக்கும் படை எளியதன்று, பெரிய படை என்று அவர்கள் கேள்வியுற்றார்கள். அன்றியும், தமிழ் நாட்டு வீரர்கள் மிக்க விறல் உடையவர்கள் என்பதையும் ஒற்றர் மூலம் அவர்கள் அறிந்திருந்தார்கள். கங்கைக்கரை நாட்டுக் கன்னர்களும் வேறுமன்னர்களும் சேரமன்னனுக்குத் தோழர்களாக இருப்பதும் அவர்களுக்குத் தெரியவந்தது. துணையாக வேறு மன்னர்களை நாமும் சேர்த்துக்கொண்டால்தான் வெற்றிபெற முடியும் என்ற எண்ணம் உண்டாயிற்று. ஆகவே துணை சேர்க்கலானார்கள். அவர்களுடைய நாட்டைச் சூழ இருந்த நாட்டுச் சிறு மன்னர் பலர் அவர்களுடன் சேர்ந்தனர். உத்தரன், விசித்திரன், உருத்திரன், பைரவன் என்ற பெயருடைய மன்னர்கள் துணையாக