59
வந்தார்கள். சித்திரன், சிங்கன், தனுர்த்தரன், சிவேதன் என்ற பெயருடைய சிலரும் கூடினர். வேறு சில மன்னர்களும் கனகவிசயர்களோடு சேர்ந்தார்கள். யாவரும் சேர்ந்துகொண்டு, "தமிழ் நாட்டு வீரர்களின் ஆற்றலை ஒருகை பார்த்துவிடுவோம்" என்று படைகளுடன் பாசறை இறங்கியிருந்த சேரனை எதிர்த்தனர். போர் மூண்டது.
இரு பக்கத்து வீரர்களும் பேராற்றலுடன் போர் புரிந்தார்கள். முரசுகள் அதிர்ந்தன. பறைகள் முழங்கின. சங்குகள் ஒலித்தன. ஊது கொம்புகளின் ஓசை எழுந்தது. தாளங்களைக் கொட்டினார்கள். யானையும் யானையும் மோதின. குதிரை வீரரும் குதிரை வீரரும் முட்டினர். தேரில் வரும் வீரர்கள் தேர் வீரர்களின்மேல் அம்பை எய்தனர். வாளெடுத்த வீரர் வாள் வீரரோடு மலைந்தனர். வில் எடுத்தவர் வில் எடுத்தவரோடு பொருதனர். வெறுங்கையுடன் மற்போரிட்டனர் சிலர்.
எங்கும் புழுதி எழுந்தது; யானைக்குக் கட்டிய மணியில் புகுந்து அதை ஒலிக்கவிடாமல் செய்தது; சங்குக்குள் புகுந்து அதை ஊதினால் ஒலி எழாமல் செய்தது.
பலருடைய கைகள் வெட்டுப்பட்டன. தலைகள் உருண்டன. தலைகளை இழந்த முண்டங்கள் குவியல் குவியலாகக் கிடந்தன. சில குறையுடம்புகள் குதித்தன. இரத்தம் வெள்ளமாக ஓடியது.
சேரன் படையிலிருந்த வீரர்கள் வடநாட்டரசர் படையைக் குலைத்து வீழ்த்தினார்கள். கொன்று களத்திற் குவித்தார்கள். தேர்கள் முறிந்து வீழ்ந்தன.