பக்கம்:சிலம்பு பிறந்த கதை.pdf/68

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



9. கங்கைக் கரையில்

வடபேரிமயத்திலிருந்து கொண்டுவந்த கல்லில் பத்தினித் தெய்வத்தின் திருவுருவத்தைச் சிற்பிகள் அமைத்துவிட்டார்கள். கோயிலில் தெய்வப் படிமங்களை நிறுவுவதற்கு முன் அவற்றைப் புனித நீரில் சிலகாலம் கிடத்திவைப்பது ஒரு வழக்கம். இமயக் கல்லில் உருவாகிய கண்ணகியின் படிமத்தைக் கங்கையில் நீர்ப் படை செய்ய வேண்டும் என்று முன்பே அரசன் தீர்மானித்திருந்தான். சிறைப்பட்டிருந்த கனக விசயர்களின் தலையில் அந்தச் சிலையை ஏற்றிக் கங்கைக் கரைக்குச் சுமந்து வரும்படி பணித்தான். அரசனும் கங்கைக் கரையை அடைந்து செய்ய வேண்டிய முறைப்படி சிலையை அவ்வாற்றில் நீர்ப் படை செய்தான்.

சில நாட்கள் சிலை நீரிலே இருக்கவேண்டு மாதலின் செங்குட்டுவனும் தன் படைகளுடன் அங்கே தங்கும்படி நேர்ந்தது. வடநாட்டில் இருந்த ஆரிய மன்னர்கள் கங்கையின் தென்கரையில் பெரிய பாடி வீட்டை அமைத்துத் தந்தார்கள்.

சில காலம் தங்குவதற்கு அமைத்ததுபோல அது தோன்றவில்லை. பேரரசனாகிய சேர மன்னனுக்கு ஏற்ற வகையில் விரிவாகவும் சிறப்பாகவும் அதைச் சமைத்தார்கள். அரசன் தங்குவதற்காக நடுவே அரண்மனையைப் போன்று தோற்றமளிக்கும் இடம் ஒன்றை எழுப்பினார்கள். மணிமண்டபங்களைக் கட்டினார்கள். பொன்னல் அலங்கரிக்கப் பெற்ற அரங்குகளை உண்டாக்கினார்கள். பூம்பந்தர் தோன்றியது. பூஞ்-