பக்கம்:சிலம்பு பிறந்த கதை.pdf/71

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

65

கணிகையோடு இருந்த காலத்தில் ஒரு நாள் இருவரும் கடற்கரைக்குச் சென்றனர். அங்கே கூடாரம் அமைத்துத் தங்கினர். இருவரும் யாழ் வாசித்தார்கள். அப்போது ஒரு வரிப்பாட்டைப் பாடினாள் மாதவி. விதி வந்து விளையாடியமையால் அந்தப் பாட்டைக் கேட்ட கோவலன், அவள் தன்னைப் புறக்கணித்து விட்டதாக நினைத்தான். அதனால் அவளைப் பிரிந்து தன் மனைவியாகிய கண்ணகியிடம் வந்தான். பிறகு அவளுடன் மதுரை புகுந்து கொலையுண்டான். அவனுடைய பத்தினி மதுரையிலிருந்து நின் நாடு புகுந்து, இப்போது வடநாட்டு அரசர் மணிமுடியின்மேல் ஏறினாள்” என்று சொல்லி விளக்கினான்.

“கோவலன் மனம் திறம்புவதற்கு மாதவி பாடிய கானல்வரிப் பாட்டுக் காரணமாக இருந்தது; மேலே நிகழ்ந்தன வெல்லாம் ஒன்றன்பின் ஒன்றாக நடக்க அதுவே மூல காரணமாயிற்று என்று சொல்லுகிறீர்களா?” என்று கேட்டான் செங்குட்டுவன்.

“ஆம், எத்தனை விளைவுகள் அடுக்கடுக்காக நிகழ்ந்துவிட்டன! எல்லாம் ஊழ்வினையால் ஆனவை” என்று பெருமூச்சு விட்டான் மாடலன்.

“நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்? எங்கே போகிறீர்கள்?” என்று செங்குட்டுவன் கேட்டான்.

“நான் பொதியில் மலையை வலம் கொண்டு சென்று குமரித் துறையில் ஆடிவிட்டு வருகிறேன். இப்போது கங்கை நீரில் ஆடுவதற்காக வந்தேன். மன்னர் பிரானைக் கண்டேன்” என்றான் அவ்வந்தணன்.

சில-5