மாலைக் காலம் வந்தது. மகளிர் விளக்குகளை ஏற்றினர். செங்குட்டுவன் படையெடுத்துச் சென்ற போது அவனுடன் போய் வெற்றியுடன் மீண்ட வீரர்கள் தங்கள் காதலிமாருடன் அளவளாவி இன்புற்றனர். ஆடலைக் கண்டும் பாடலைக் கேட்டும் களித்தனர்.
அந்த மாலையில் மாசுமறுவற்ற வானத்தில் திங்கள் தண்ணிய நிலாவைப் பால்போல் பொழிந்து கொண்டிருந்தது. நிலா, மாளிகைகளின் மேலும் மண்டபங்களிலும் பரந்து அழகு செய்தது. வஞ்சிமாநகரின் நடுவில் மேருவைப்போல உயர்ந்து நின்றது அரசன் அரண்மனை. பொன்னும் மணியும் கொண்டு அலங்காரம் செய்த அரங்கம் ஒன்று அதில் உண்டு. நிலா மாடமும் இருந்தது. திங்களின் அழகைக் கண்டு மகிழ்வதற்காகச் சேரமானுடைய மாதேவி புறப்பட்டாள். அந்தப்புரத்திலுள்ளவர்கள் வரிசை வரிசையாக நின்று அவளை வாழ்த்தினர்.
அழகான மகளிர் தம் கைகளில் விளக்குகளை ஏந்திப் பல்லாண்டு பாடினர். முழவும் யாழும் இசைத்தன ஒருசார். ஒருபக்கம் இன்னிசைப் பாடல் பரந்தது. அந்தப்புரத்தில் ஏவல் செய்யும் கூனியரும் குட்டைப் பெண்களும் கத்துரியும் சந்தனமும் கையில் எடுத்து நின்றார்கள். பூசும் வண்ணமும் சுண்ணமும் மலர் மாலைகளும் பேடிகள் ஏந்தினார்கள். ஒருபக்கம் பூவும் வாசனைப் புகையும் நறுமணப் பொருள்களும் கொண்டு நின்றனர் சிலர். கண்ணாடி ஒரு பக்கம், ஆடைகளும்