பக்கம்:சிலம்பு பிறந்த கதை.pdf/79

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

73

"என்ன அது? நன்றிகெட்ட அந்த இரண்டு மன்னர்களுக்கும் எப்படிப் புத்திபுகட்டுவது என்பதைச் சொல்லப் போகிறீர்களா? கனகவிசயர் இழித்துப் பேசியதற்காக இத்தனை தூரம் கடந்து போர் செய்யப் போனேனே! நம்மைச் சேர்ந்த இவர்களே நம் அருமை அறியாமல் இருக்கும்போது மற்றவர்களைச் சொல்வது என்ன முறை?” கோபத்தால் அவனுக்குச் சிரிப்பு உண்டாயிற்று.

"சற்றே சினம் ஆறி, நான் சொல்வதைச் செவியில் ஏற்கவேண்டும்” என்று மறுபடியும் மாடலன் மெல்லச் சொன்னான்.

செங்குட்டுவன் சற்று மெளனமாக இருந்தான்; பின்பு மாடலனை நோக்கி, “சொல்லுங்கள்” என்றான்.

“மன்னர்பிரானுடைய புகழ் வாழ்க! கொற்றம் வாழ்க! தாங்கள் பல போர் செய்து பகைவர்களை அழித்து வெற்றிபெற்றீர்கள். போன இடங்களிலெல்லாம் வெற்றியே அன்றித் தோல்வியே காணாதவர்கள் தாங்கள். தங்கள் வாழ்நாள் ஆற்றுமணலினும் பல மடங்காகப் பெருகட்டும்! நான் சொல்லும் சில வார்த்தைகளைப் புறக்கணிக்காமல் செவியில் ஏற்க வேண்டும். நான் பல நாடுகளும் சென்று பல பெரியோர்களோடு பழகியவன். உலகமெல்லாம் நன்றாக வாழவேண்டுமென்ற நோக்கம் உடையவன். இப்போது சொல்லப்போவது எல்லோருடைய நன்மையையும் மனத்திற் கொண்டுதான். முக்கியமாகத் தங்களுக்கும் இதனால் நன்மையே உண்டாகும்.”

“என்ன? சொல்லுங்கள். நான் உங்கள்மேற் கோபம் கொள்ளவில்லையே!”