கோவலனுக்கும் கண்ணகிக்கும் நேர்ந்த துயரத்தை அறிந்து அவ்விருவரின் தந்தையரும் துறவு பூண்டதையும், தாய்மார் இருவரும் உயிர்நீத்ததையும் மாடலன் செங்குட்டுவனிடம் முன்பு சொன்னான் அல்லவா? கண்ணகியோடு இருந்து அவளுடன் நெருங்கிப் பழகிய தோழி ஒருத்தி உண்டு. மறைக் குலமகளாகிய அவளுக்குத் தேவந்தியென்பது பெயர். கண்ணகியை வளர்த்த செவிலித்தாய் ஒருத்தி இருந்தாள். செவிலித் தாயைக் காவற்பெண்டு என்றும் சொல்வார்கள். அந்தச் செவிலியின் மகள் ஒருத்தியும் கண்ணகிக்குத் தோழியாக இருந்தாள். இம் மூவரும் கோவலன் கொலையுண்டதையும் கண்ணகி மதுரையை எரித்துவிட்டுப் புறப்பட்டதையும் கேள்வியுற்றார்கள். கண்ணகியை விட்டுவிட்டுக் காவிரிப்பூம்பட்டினத்தில் இருப்பதற்கு அவர்களுக்கு மனம் இல்லை. ஆதலின் அவர்கள் மூன்று பேரும் புகார் நகரத்தை விட்டு மதுரைக்கு வந்தார்கள்.
கண்ணகி எங்கே தங்கியிருந்தாள், அவள் கணவன் எங்கிருந்து போனான், எப்படிக் கொலையுண்ணப் பட்டான் என்று அவர்கள் விசாரித்து அறிந்தார்கள். மதுரைக்குப் புறம்பேயுள்ள ஆயர்பாடியில் கண்ணகி தங்கியிருந்த செய்தி தெரிந்தது. அங்கே அவளைப் பாதுகாத்து வேண்டிய உதவிகளைச் செய்த மாதரி என்னும் ஆய்மகள் துயரம் தாங்காது இறந்த செய்தியைக் கேள்வியுற்றார்கள். அவளுடைய பெண்ணாகிய ஐயை என்பவள் அங்கே இருந்தாள்.