பக்கம்:சிலம்பொலி.pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

94

சிலம்பொலி

தன் மனைக்குச் சென்றவன் அல்லன் என்பதே உறுதியாகிறது.

ஆனால், பிள்ளை நகுலத்திற்குக் கேடு செய்த பார்ப்பனியின் துயர் தீர்த்தலும், வயந்த மாலை வந்து கொடுத்த மாதவியின் மடலை வாங்க மறுத்தலும் ஆகிய கோவலன் நிகழ்ச்சிகள், மாதவியின் மனையல்லாத, முறையே, பெருங்குடி வாணிகர் மாட மறுகின் மனையின் கண்ணும், கூலமறுகின் கண்ணும் நிகழ்ந்தனவாகக் காட்டும் அகச் சான்றுகள் இருக்கும் போது, கோவலன் மாதவியையும், அவள் மனையையும் விடுதல் அறியா விருப்பினன் ஆயினன் என்பது எவ்வாறு பொருந்தும் என்ற வினா எழல் இயல்பே;

பார்ப்பனியின் துயர் தீர்த்த செயலை, மாதவியின் உறவு கொண்ட பின்னர் நிகழ்ந்த நிகழ்ச்சியாகக் கொண்டாலும், அது, கோவலன் தன் மனையை மறந்தவன் அல்லன் என்ற கூற்றிற்குத் துணை செய்வதாகாது.

பீடிகைத் தெருவாவது, பெருங்குடி வணிகர்கள் இருந்து வாணிகம் புரியும் தெருவாகும். “கோடி பல அடுக்கிய கொழுநிதிக் குப்பை மாடமலிமறுகின் பீடிகைத் தெருவு” (கடலாடுகாதை: 121-122) என முன்னரும் கூறப்பட்டிருப்பது காண்க. பீடிகைத் தெருவு, பெருங்குடி வணிகரின் மாடமலி மறுகோடு இணைத்தே கூறப்படும் (“பீடிகைத் தெருவும்,பெருங்குடி வாணிகர் மாடமறுகும்”—இந்திர விழவூர் எடுத்த காதை: 41-42) என்றாலும், பீடிகைத் தெருவு வேறு; பெருங்குடி வாணிகர் மாடமறுகு வேறு. பீடிகைத் தெருவு வணிகப் பெருமக்களின் பெரு வாணிகம் நடைபெறும் வீதி. வாணிகர் மாடமறுகு, அவ்வணிகப் பெருமக்கள் வாழும் மாட மாளிகைகள் இடம் கொண்டிருக்கும் பெருவீதி. “பீடிகைத் தெருவு” என்ற தொடருக்கு, இந்திர விழவூர் எடுத்த காதை(41), கொலைக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிலம்பொலி.pdf/100&oldid=1782448" இலிருந்து மீள்விக்கப்பட்டது