புலவர் கா. கோவிந்தன்
95
கனக் காதை (104) ஆகிய இரு இடங்களிலும், “கடைத் தெருவு” என அடியார்க்கு நல்லார் உரை கூறியிருப்பதும், “வணிகர் மாடமறுகு” என்ற தொடருக்கு, “வணிகர் குடியிருப்பு” என அரும்பத உரைகாரரும், “பெரிய குடியிருப்பை உடைய வாணிகரது மாடமாளிகைத் தெருவு” என அடியார்க்கு நல்லாரும் பொருள் கூறியிருப்பது காண்க.
பார்ப்பனி, “கருமக்கழிபலம் கொண்மினோ” எனக் கூவியவாறே, பீடிகைத் தெருவிலும் அலைந்து திரிந்துள்ளாள்; பெருங்குடி வாணிகர் மாட மறுகிலும், அலைந்து திரிந்துள்ளாள்; வேறு பல மனைகள் தோறும் அலைந்து திரிந்துள்ளாள். அந்நிலையில், பீடிகைத் தெருவில் இருந்த கோவலன், அவளை அருகில் அழைத்து, அவள் துயர் தீர்த்தான். அது போலவே, வசந்தமாலை, மாதவி கடிதத்தோடு சென்று, கோவலனைக் கண்டது, கூலமறுகில்; அதாவது, பல்வேறு கூலங்கள் விற்கப்படும் பெருங்கடை வீதியில், அதாவது பீடிகைத் தெருவில்.
ஆகக் கோவலன் வாழ்வது, தொடக்கத்தில் சில ஆண்டுகள், கண்ணகி மனையிலும், பின்னர்க் கானல்வரி நிகழ்ச்சி வரை மாதவி மனையிலும் என்றாலும், அந்நாட்களில், அவன் முறையாகப் பெருவாணிகத் தெருவில், அதாவது பீடிகைத் தெருவில், தன் வாணிக நிலையத்தில் இருந்து வாணிகம் புரிந்து வந்தான் என்பதுதான் அவ்விரு அகச் சான்றுகளாலும் உறுதி செய்யப்படுமேயல்லாது, அவன் மாதவியோடு உறவு கொண்டிருந்த போதும், தன் மனைக்குச் சென்று வந்தான் என்ற முடிவுக்கு அரண் செய்வன ஆகா.
ஆகவே, மாதவி உறவு கொண்ட பின்னர்க் கோவலன் தன் மனையை மறந்தே வாழ்ந்தான் என்பதே முடிந்த முடிபாகும்.