“குலம் தருவான் பொருள் குன்றம் தொலைந்து இலம்பாடுற்றேன்” என்ற கோவலன் கூற்றில் வரும் குலந்தருவான் பொருள் குன்றத்தில் மங்கல அணியும், காற்சிலம்பும் ஒழிந்த கண்ணகியின் பல்வேறு அணிகளும் அடங்கும் எனல் பொருந்துமா?
“குலந்தருவான் பொருள் குன்றம் தொலைந்த இலம் பாடு நாணுத்தரும்” எனக் கோவலனும், அது கேட்டுச் “சிலம்புள கொண்மென” (சிலம் பு:9: 70 - 71, 73) எனக் கண்ணகியும் கூறுவது கொண்டு, சிலம்பு தவிர்த்த, கண்ணகியின் பிற அணிகள் எல்லாம், மாதவிக்குக் கொடுத்தே தீர்ந்து போயின எனக் கொள்வது பொருந்துமா?
“சிலம்பு முதலாகச் சென்ற கலனொடு உலந்த பொருள் ஈட்டுதல் உற்றேன்” (சிலம்பு:9 : 74-75} என்பது கொண்டு, முதலீடு செய்ய, சிலம்பு தவிர்த்து வேறு அணிகலன் எதுவும் இல்லை. அனைத்தும் தீர்ந்து. போயின எனக் கூறுவதும் பொருந்துமா?
மனையறம் படுத்த காதையில், கண்ணகியைப் பாராட்டும் கோவலன், “மறுவில் மங்கல அணியே அன்றியும் பிறிதணி அணியப் பெற்றதை எவன்கொல்?”, “திருமுலைத் தடத்திடைத் தொய்யில் அன்றியும் ஒரு காழ்