பக்கம்:சிலம்பொலி.pdf/108

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

102

சிலம்பொலி

கௌந்தி அடிகள் துணை கிடைத்தமையால், மனைவியின் துயர் தீர்த்தேன் எனக் கூறும் நிலையில் மனைவியைக் குறிப்பிடும் போது, “தொடிவளைத் தோளி துயர் தீர்த்தேன்” (சிலம்பு : 10 : 63) எனக் கூறுவதும் காண்க.

வீடு விட்டுக் காடு புகுந்து அலையும் தன் நிலை கண்டு வருந்தும் கோவலனுக்கு, “இவ்வருத்த நிலையிலும் மனைவியாம் கண்ணகியோடு சேர்ந்தே இருக்கும் பேறு பெற்றனை” என ஆறுதல் கூறும் போதும், “தாயும் நீயே ஆகித் தாங்கு” எனக் கூறிக், கண்ணகியை மாதரி பால் அடைக்கலம் அளிக்கும் நிலையிலும், கௌந்தி அடிகளார்க்கு ஆயிழைகள் அணிந்து நிற்கும் கோலத்திலேயே, கண்ணகி காட்சி அளித்துள்ளாள். “ஆயிழை. தன்னொடு பிரியா வாழ்க்கை பெற்றனை” (சிலம்பு : 14 : 58 -59), “ஆயிழை தனக்குத் தாயும் நீயே ஆகித் தாங்கு” (சிலம்பு :15 : 135-136) எனக் கூறும் கௌந்தி அடிகளார் வாக்கினைக் காண்க.

அடிசில் ஆக்குதற்கு ஆன கலங்களோடு, தாம் கொடுத்த, கோளிப்பாகல் முதலாம் காய்களையும், மா முதலாம் கனிகளையும், சாலி அரிசியையும் பெற்றுக் கொண்ட கண்ணகியின் கைகளில், கோல்வளை ஒளி விட்டுக் கிடந்ததையும், அமுதுண்ணும் கோவலன் அருகில் அமர்ந்து உணவு படைக்கும் நிலையில், தம் குல தெய்வமாம் கண்ணனுடனிருக்கும் நப்பின்னையாகக் காட்சி அளித்த கண்ணகியின் தோள்களில் பல்வளைகள் கிடந்து ஒளி விட்டதையும் இடைக் குல மடந்தை மாதரியும் அவள் மகள் ஐயையும் கண்டு களித்துள்ளனர். “சாலி அரிசி, தம்பால் பயனொடு கோல்வளை மாதே! கொள்கெனக் கொடுப்ப” — “பூவைப்புதுமலர் வண்ணன் கொல்லோ? நல்லமுதுண்ணும் நம்பி! ஈங்குப் பல்வளைத் தோளியும் பண்டு நம் குலத்துத் தொழுனை ஆற்றினுள் தூமணி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிலம்பொலி.pdf/108&oldid=1789342" இலிருந்து மீள்விக்கப்பட்டது