பக்கம்:சிலம்பொலி.pdf/116

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மாதவி, கோவலன் அன்புக்கு ஏங்கியவளே யல்லாது, அவன் மாநிதியைக் கருத்தில் கொண்டவள் அல்லள்!

மாதவியின் குறிக்கோள் எல்லாம், தன் உறவு கொள்ள விரும்புவான் கொண்டு வந்து கொட்டும் பொற்குவியல் மீதேயல்லாது, அவன் காட்டும் அன்பின் மீது அன்று, எனக் குற்றம் சாட்டி, அதற்கு ஆதாரமாக அரசன் முன் ஆடிப் பெற்ற மாலைக்கு ஆயிரத்து எட்டுக் கழஞ்சு பொன் விலை வைத்து, அதை வாங்கத் தக்கவரே, அவளை அடையத் தக்கவர் எனக் கூறி, நகரத்துச் செல்வக் குடியில் பிறந்த இளைஞர்கள் திரியும் தெருவில் கொண்டு போய் விற்க முனைந்த செயலைச் சான்றாகக் காட்டுவர்

நூறுபத் தடுக்கி எட்டுக்கடை நிறுத்த
வீறுயர் பசும்பொன் பெறுவதுஇம் மாலை;
மாலை வாங்குநர் சாலும்நம் கொடிக்குஎன
மானமர் நோக்கியோர் கூனிகைக் கொடுத்து
நகர நம்பியர் திரிதரு மறுகில்
பகர்வனர் போல்வதோர் பான்மையின் நிறுத்த”

—சிலம்பு: அரங்கேற்று காதை: 164-169

அவ்வாறு விலை கூறி விற்க முனைந்தது உண்மை; ஆனால், அது செய்தவள், மாதவி அல்லள்; மாறாகப் பரத்தையர் தொழில் மூலம் பொருள் ஈட்டுவதையே குறிக்கோளாகக் கொண்ட அவள் தாய் சித்திராபதி.

மேலும் மாதவி, கோவலன் காட்டும் அன்பில் நாட்டம் உடையவளே அல்லாது, அவன் கொண்டு வந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிலம்பொலி.pdf/116&oldid=1776147" இலிருந்து மீள்விக்கப்பட்டது