புலவர் கா. கோவிந்தன்
111
கொட்டும் பொருளில் நாட்டம் உடையவள் அல்லள் என்பதை உறுதி செய்யும் வலுவான அகச்சான்று, மணிமேகலைக் காப்பியத்தில் உளது.
மாதவி காதலனாம் கோவலன், மாநிலம் முழுதாளும் மன்னன் நிகர் மாநிதிக் கிழவன் மகனேயாயினும், அவன் மன்னன் அல்லன். ஆனால், அம்மாதவி ஈன்ற மணிமேகலைபால் மனதைப் பறி கொடுத்தவன், மாநிலம் முழுதாளும் மன்னன் மகன். இதை மாதவி அறிவாள். அவ்வுண்மையை அவளுக்கு, அவள் தோழி வசந்தமாலை அறிவித்திருந்தாள். மன்னன் மகன், தன் மீது தணியாக் காதல் கொண்டுள்ளான் என்பதைத், தன் தாய்க்கு, வசந்தமாலை அறிவித்ததை, மணிமேகலை தன் காதுகளாலேயே கேட்டறிந்துள்ளாள். -
“சித்திராபதியோடு உதயகுமரன் உற்று
என்மேல் வைத்த உள்ளத்தான் என
வயந்தமாலை மாதவிக்கு ஒருநாள்
கிளந்த மாற்றம் கேட்டேன்.”
என, அவளே கூறுவது காண்க. [மணிமேகலை: 4 பனிக் கரை புக்க காதை: 79-82] .
மகள் மீது, மன்னன் மகனே மனதைப் பறி கொடுத்துள்ளான்; அவனுக்குத் துணை நிற்க, தன் தாய் சித்திராபதியும் முனைந்துள்ளாள். இந்நிலையில் தன் மனையில், பொன் கொழிப்பதே மாதவியின் குறிக்கோளாய் இருந்திருக்குமாயின், தாயின் முயற்சிக்குப் பச்சைக் கொடி . காட்டியிருப்பாள் மாதவி. ஆனால், அவள் அது செய்திலள். மாறாக—