பக்கம்:சிலம்பொலி.pdf/118

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

112

சிலம்பொலி

மகள் மணிமேகலை,
அருந்தவப் படுத்தல் அல்லது, யாவதும்
திருந்தாச் செய்கைத் தீந்தொழில் படாஅள்,
சித்திரா பதிக்கும் செப்பு நீ”

எனக் கூறியதோடு (மணிமேகலை: ஊரவர் உரைத்த: காதை: 55-71) நில்லாமல், மணிமேகலையைப் பரத்தையர் ஒழுக்கத்திற்குப் பலியாக்காது, அவள் கூந்தலை, அதில் சூட்டிய மாலையோடு மழித்துப் புத்தன் நெறியில் புகுத்துவதும் செய்து முடித்தாள்.

மணிமேகலையை வான்துயர் உறுக்கும்
கணிகையர் கோலம் காணாது ஒழிகெனக்
கோதைத் தாமம் குழலொடு களைந்து
போதித தானம் புரிந்து அறங்கொள்ளவும்”

—சிலம்பு : நீர்ப்படைக் காதை:105-108

கோவலன் அன்புக்கு ஏங்கி, அதற்கு வழி இல்லாமல் போய் விட்டது என அறிந்ததுமே, அறவண அடிகள் அறவுரை கேட்டுத் தான் துறவு மேற்கொண்டதோடு அமையாது, கன்னி கழியாக் காதல் மகளின் கோதையையும், குழலையும் களைந்து துறவு மேற்கொளப் பண்ணிய மாதவி, கோவலனின் மாநிதி மீதே குறியாக இருந்தாள் எனல் பொருந்துமோ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிலம்பொலி.pdf/118&oldid=1789500" இலிருந்து மீள்விக்கப்பட்டது