புலவர் கா. கோவிந்தன்
115
யில், அவளை அவ்வாறு பாடச் செய்தது தன் பாக்களின் கருப் பொருளே; அது கேட்கும் எந்தப் பெண்ணின் உள்ளத்திலும் அத்தகைய உணர்வுதான் எழும். ஆகவே, தவறு தன்னுடையதே என எண்ணித் தன் பிழைக்குத் தான் இரங்க வேண்டுவது விடுத்து, "மாயப் பொய் பல கூட்டும் மாயத்தாள்" (கானல்வரி : 52] எனச் சிந்தியாதே குற்றம் சாட்டி விட்டாள்.
அடுத்து, கானல்வரி பாடிய அன்று மாலை, மாதவி. வசந்தமாலைவழி விடுத்த அழைப்புக் கடிதத்தைக் கையால் தொடுவதும் செய்யாததன் மூலம்,அவள் முடங்கலைக் கண் திறந்து பார்க்க வேண்டும்; அதில் அவள் செய்திருக்கும் முறையீட்டினைக் கருத்தில் கொள்ள வேண்டும் என்ற உணர்வும் இலனாகி, மாதவியின் அன்பில் ஐயுறவு கொள்ளாத நிலையில், அவள் ஆடிக் காட்டிய. கண் கூடு வரி முதலாக எடுத்துக் கோள்வரி ஈறாகப்பல்வேறு வரிக்கூத்துக்களைத் தான் கண்டு மகிழவே அவள் ஆடியதாகக் கொண்டு மகிழ்ந்தவன், இப்போது, அவ்வரிக் கூத்துக்கள், "ஆடல் மகளே ஆதலின், ஆயிழை! பாடு பெற்றன அப்பைந்தொடி தமக்கு' [வேனிற் காதை: 110] எனக் கூறிப் பழித்துரைத்ததன் மூலம், தவறான தீர்ப்பினை இரண்டாவது முறையாகவும் வழங்கி விட்டான்.
அந்த அளவோடு நிற்கவில்லை. தன் மனை புகுந்து கண்ணகியின் வாடிய மேனியையும், அதற்குக் காரணமாம் அவள் வருத்தநிலையையும், கண்ணுற்ற கோவலன், அவை குறித்தோ, அவற்றிற்குக் காரணமாவார் இன்னார் என்றோ வாய் திறந்து கண்ணகி கூறாதிருக்கவும், "சலம்புணர் கொள்கைச் சலதி" என மாதவியைப் பழித்து உரைத்ததோடு, "அவளோடு ஆடிக் குலம்தரும் வான் பொருள் குன்றம் தொலைந்தது?" [கனாத்திறம்