122
சிலம்பொலி
3. தன் இளமை காரணமாகப் பிறரை நகைத்தல், 4. பிறர் இளமையால் தன்னைக் கண்டு நகைத்தல், 5. தன் பேதைமை காரணமாக நகைத்தல், 6. பிறர் பேதைமையைக் கண்ட வழித் தான் நகைத்தல், 7. தன் மடமை காரணமாக நகைத்தல், 8. பிறர் மடமை கண்டு நகைத்தல் என்பன அவை. "எள்ளல், இளமை, பேதைமை, மடன் என உள்ளப்பட்ட நகை நான்கு என்ப" என்பது தொல்காப்பிய விதி.
[தொல்: பொருள் : மெய்ப்பாட்டியல் :4]
கண்ணகி நகைத்தநகை, இவ்வெட்டனுள், கோவலன் பேதைமை கண்டு நகைத்த நகையாகும்.
குற்றம் புரிந்தவள் மாதவி என்ற எண்ணம் கண்ணகிக்கு என்றுமே உண்டானது இல்லை. மாதவி தீது இலள்; தீது என்னதே" எனக் கோவலன் புறஞ்சேரியில் உணர்ந்து கொண்ட உண்மையைக் கண்ணகி தொடக்கத்திலிருந்தே உணர்ந்து வந்தாள். அதனால்தான், மனை புகுந்து தன் முன் வந்து நின்றதுமே, கோவலன் மாதவியைக் குற்றம் சாட்டிய போது, அதை ஏற்றுக் கொள்ளாததை நகைத்தே உணர்த்தி விட்டாள்.
மாதவி குற்றம் அற்றவள் என்ற தீர்ப்பை, இவ்வகையால், புகார் நகரை விட்டுப் புறப்படுவதற்கு முன்பே வழங்கிவிட்ட காரணத்தால், அத்தனகய தீர்ப்பை,மறுபடியும் வழங்க வேண்டிய கட்டாயம், அவளுக்கு நேரவில்லை; ஆகவேதான், வஞ்சி மாநகர் புகுந்து வழிபடும் தெய்வமாகி விட்ட நிலையில், மாதவி குறித்து அவள் ஏதும் கூறினாள் அல்லள்.