புலவர் கா. கோவிந்தன்
9
நிகழ்ச்சிகள் என்ற கருத்துக் கொண்டுள்ளார் திரு. ம.பொ.சி. என்பது தெரிகிறது. நிற்க.
ஒரு நாள் காலை கணவனை வழியனுப்பி வைத்த கண்ணகி, கொலையுண்டு கிடந்த கணவனை மறுநாள் மாலைதான் கண்டாள் என்ற தம் முடிவிற்கு மேலும் அரண் தேட, அதே சிலப்பதிகாரத்தில் வரும் இரு சொற்றொடர்களின் துணையை வேறு நாடியுள்ளார்.
“சிலப்பதிகாரத் திறனாய்வு” என்ற தம் நூலின் 130-131 ஆம் பக்கங்களில், “காலையில் போனார்; மாலையில் வந்தார்” என்று கூறினால், அது ஒரு நாளுக்கு உரிய காலையையும், மாலையையுமே குறிப்பதாகக் கொள்வது உலக வழக்கு. சிலப்பதிகாரத்திலே, தன்னைப் பிரிந்து சென்ற கோவலன், வயந்தமாலை வசம் தான் கொடுத்தனுப்பிய கடிதத்தை வாங்க மறுத்ததைக் கேட்ட மாதவி, ‘மாலை வாரார் ஆயினும், மாணிழை! காலைகாண்டுவம்’ (சிலம்பு : 8, வேனிற்காதை : 115-116) என்று கூறுகிறாள். இதற்கு உரை எழுதிய அடியார்க்கு நல்லார், ‘இம்மாலைப் பொழுதினில் வருவார்; வாரார் ஆயின் காலைப் பொழுதில் ஈண்டு நாம் காண்போம் எனச் சொன்னாள்’ என்கிறார். இவரும் மாலை நேரத்தை அடுத்து வரும் காலைப் பொழுதையே குறிப்பிடுகின்றார்” என அவர் கூறியிருப்பது காண்க.
"மாலை வாரார் ஆயினும், காலை காண்டுவம்”
என்ற சிலப்பதிகாரத் தொடரில் வரும் காலை, மாலையை அடுத்து வந்த காலைதான்; அதாவது, கோவலன் பிரிந்து சென்ற மாலையை அடுத்து இரவு வர, அவ்விரவை அடுத்து வந்த காலைதான் என்பதில், அதாவது, மாலைக்கும், காலைக்கும் இடையில் ஒர் இரவு இடங்கொண்டு விட வந்த காலைதான் என்பதில் ஐயம் இல்லை.