16
சிலம்பொலி
கந்தர் சஷ்டி, போன்ற நாட்களில் இரவு உண்ணா விரதம் இருப்பவர், விரதம் முடித்து உண்பது, மறுநாள் விடியற்காலையில்தான் என்பது இன்றும் வழக்கமாதல் அறிக. இதை உணர்ந்தவள் மாதரி; ஆகவேதான், இரவு உண்ணா விரதம் உடையவன் கோவலன் என, வந்திருப்போன் இயல்பைக் கூறி, அவன் உண்ணுவதற்கேற்ப ஆக்கும் உணவு காலைப் போதிலேயே ஆக்கப்படுதல் வேண்டும் என்பதை அறிவுறுத்த வெறும் அடிசில் என்னாது, “நாள் வழிப்படூஉம் அடிசில்” என்றாள்.
நாள் என்னும் சொல் விடியற்போது எனும் பொருள் உடையதாகும்; “நாள் இரை”—காலை உணவு [குறுந்தொகை: 364; ஐங்குறுநூறு: 63:111, அகநானூறு: 63, புறநானூறு : 283], “நாள் மேயல் ஆகும்”—விடியற் போதில் மேயும் [ஐங்குறு நூறு: 95], “நாள் அணி”—காலை அணி [பரிபாடல்: 9:20; 10:114], “நாள் ஞாயிறு”—காலை ஞாயிறு [களவழி நாற்பது: 1.] ஆகிய தொடர்களில் நாள் எனும் சொல், விடியற் போதை உணர்த்தி நிற்றல் காண்க. “நாளங்காடி” எனும் சொல் காலைக் கடை வீதியை உணர்த்துவதும் அறிக.
ஆகவே “நாள் வழிப்படூஉம் அடிசில்” என்பதற்கு விடியற் போதில் உண்ணும் உணவு என்பதே பொருளாம். அடியார்க்கு நல்லாரும் “பகற் பொழுதே உண்ணும் உணவு” என்று தான் கூறினாரே ஒழிய, “நண்பகற் போதில் உண்ணும் உணவு” எனக் கூறவில்லை. ஞாயிறு தோன்றி, அது மறையும் வரையுள்ள பொழுதெல்லாம் பகல்தான்.
ம.பொ.சி. அவர்கள் கருத்துப்படி, கோவலன் இரவில் உண்ணப் போவது இல்லை; மறுநாள்தான்