பக்கம்:சிலம்பொலி.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலவர் கா. கோவிந்தன்

17

உண்ணப் போகிறான். மறுநாள் நண்பகற் போதில்தான் உண்ணப் போகிறான் என்றால், அடிசில் ஆக்குதற்கு வேண்டும் பொருள்களை மறுநாள் காலையில் கொடுத்திருக்கலாம். ஆனால் மாதரி, “நெடியாது அளிமின்”— அதாவது, காலம் தாழ்த்தாது இப்போதே கொடுத்து விடுங்கள் எனப் பணிக்கிறாள். ஏன்?

விடியற்காலையில் உண்பதற்காம் உணவைச் சமைக்க வேண்டுமாயின், அதற்குத் தேவைப்படும் பொருள்களை, முந்திய நாள் இரவே ஈட்டி வைப்பதுதான் முறையாகும். இது உணர்ந்தவள் மாதரி. ஆகவேதான் “அளிமின்” என ஆணையிட்ட அப்போதே, [அப்பொருள்கள்.] அளிக்கப்பட வேண்டும் என்பதை அறிவுறுத்த, “அளிமின்” என வாளா கூறாது, “நெடியாது அளிமின்”—அதாவது காலம் தாழ்த்தாது, இப்போதே அளிமின் எனக் கூறினாள். மாதரியின் ஆணை வழி நடக்கும் ஆயர் மகளிர், அவற்றை அப்போதே அளிக்காது மறுநாளா அளித்திருப்பர்? இருக்காது; அப்போதே அளித்திருப்பர். இதுதான் உண்மை. அவ்வாறாகவும், ம.பொ.சி. அவர்கள், “மறுநாள் முற்பகல் மாதரி கூளித்த பண்டங்கள்” எனக் கூறுவது பொருந்தாது.

“சாவக நோன்பிகள் அடிகள் ஆதலின்” என்று தொடங்கி, “நெடியாது அளிமின் நீர் எனக் கூற” என முடியும் பகுதிக்கு உரை எழுதி முடித்து, அட்டிற்காம் பொருள்களை ஆயர் மகளிர் அளித்ததை உணர்த்தும் “இடைக்குல மடந்தையர்” என்று தொடங்கிக் “கொள்கெனக் கொடுப்ப” என முடியும் பகுதிக்கு உரை எழுதத் தொடங்குவதற்கு முன்னர், இரண்டிற்கும் இடையில் “இத்துணையும் கூறியது, இவர்கள் சென்ற அன்றிரவு செய்தனவும் மேற் செய்வனவும்; இனி மற்றை நாளைச் செய்தி கூறுகிறார்” [சிலம்பு 16: 18-21 உரை விளக்கம்]

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிலம்பொலி.pdf/23&oldid=1775245" இலிருந்து மீள்விக்கப்பட்டது