பக்கம்:சிலம்பொலி.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

20

சிலம்பொலி

ஆயர் மகளிர் கொடுத்ததைக் கூறும், “கோல் வளைமாதே! கொள்கெனக் கொடுப்ப” என்ற தொடரை அடுத்து வேறு எதையும் கூறாது, கை விரல் சிவக்கக் காய் அரியத் தொடங்கிய கண்ணகி செயலை விளக்கும் “மெல் விரல் சிவப்ப” எனத் தொடங்கும் தொடரை அமைத்திருக்கும் இளங்கோவடிகளாரின் விரைவு, உணவுப் பொருட்களைக் கொடுத்த அக்கணமே கண்ணகி அட்டில் தொழிலைத் தொடங்கி விட்டாள் என்ற கருத்திற்கு அரண் செய்து நிற்றல் அறிக.

கோவலன், ஆயர் பாடியை விட்டுக் காலைப் பொழுதிலேயே புறப்பட்டு விட்டான் என்பதை உறுதி செய்யும் வலுவான அகச் சான்று ஒன்றும் சிலப்பதிகாரத்திலேயே உளது. கோவலர் இல்லம் நீங்கிக் கோவலன் தெருவில் அடியிட்டதும், கொல்லேறு ஒன்று எதிர்த்ததாகவும், அதைத் தீ நிமித்தமாகக் கொள்ளுதல் வணிகர் குலத்தில் வழக்கமில்லையாகவே, அதைப் பொருட்படுத்தாதே போய் விட்டான்—“பல்லான் கோவலர் இல்லம் நீங்கி வல்லா நடையின் மறுகிற்செல்வோன், இமிலேறு எதிர்ந்தது இழுக்கு என அறியான் தன்குலம் அறியும் தகுதி அன்று ஆதலின்” (சிலம்பு: கொலை: 100-10l) என்று இளங்கோவடிகள் கூறியுள்ளார்.

பொதுவாக, ஆயர்கள் தம் கறவைகளையும், காளைகளையும் கட்டவிழ்த்துக் காடு போக விடுவது காலைப் பொழுதில் நிகழுமே அல்லாது, நண்பகற் போதில் நிகழ்வது இல்லை. கோவலன் சென்ற போது, கட்டவிழ்த்து விடப்பட்ட காளையொன்று, அவனை எதிர்த்தது என்றால், சென்ற நேரம் காலைப் பொழுதே ஆதல் வேண்டும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிலம்பொலி.pdf/26&oldid=1775284" இலிருந்து மீள்விக்கப்பட்டது