பக்கம்:சிலம்பொலி.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலவர் கா. கோவிந்தன்

21

கோவலன் காலைப் பொழுதிலேயே புறப்பட்டு விட்டான் என்பதை வணிக மக்களின் நடைமுறைப் பழக்கம் ஒன்றும் உறுதி செய்கிறது. தங்கள் வாணிக நிலையம் செல்லும் வணிகப் பெருமக்கள் காலை உணவு உண்டு, காலைப் போதில் செல்வதே நடைமுறை வழக்கமாம். நண்பகல் வரை, மனையில் வாளாக் கிடந்து, நண்பகல் உணவுண்டு, அதன் பின்னரே செல்வர் என்பது வழக்கமாகாது.

இது வரை கூறியவற்றால், அட்டிற்காம் பொருள்களை ஆய்ச்சியர் இரவே அளிக்க, அட்டில் தொழிலைக் கண்ணகி விடியற் போதே முடிக்க, கோவலன் உணவுண்டு, சிலம்பு விற்கக் காலைப் போதிலேயே புறப்பட்டு விட்டான் என்பதே உறுதி செய்யப்படும்.

கோவலன் கொலையுண்டது எப்போது? “கண்ணகியிடம் விடை பெற்றுச் சென்ற, அன்று மாலையே கொலையுண்டான்” [பக்கம். 143]. “குரவை நிகழ்ந்த முந்திய நாள் மாலையிலேயே கோவலன் கொலையுண்டான்” [பக்கம். 125] எனக் கூறி, கோவலன் கொலையுண்டது மாலையில் என்ற முடிவிற்கு வந்த ம.பொ.சி. தம்முடைய முடிவிற்கான அகச்சான்று எதுவும் காட்டினாரல்லர்.

கொலையுண்ட கோவலனைக் கண்ணகி கண்டது மாலையில் என்பதற்கான அகச்சான்றுதான் இருக்கிறதேயொழிய, கொலையுண்டது மாலையில் என்பதற்கான அகச்சான்று எதுவும் இல்லை. மாறாக, நிகழ்ச்சிகளை நிரலே வைத்து நோக்கும் போது, கோவலன் கொலையுண்டது நண்பகற் போதில் என்பது தெளிவாகப் புலப்படும்.

சில—2

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிலம்பொலி.pdf/27&oldid=1775291" இலிருந்து மீள்விக்கப்பட்டது