புலவர் கா. கோவிந்தன்
23
பிறப்பித்ததும், கல்லாக் களிமகன் கோவலனை வெட்டி வீழ்த்தியதும் ஆகிய இந்நிகழ்ச்சிகள், மிக மிக விரைவாக, சில நாழிகைக்குள் நடந்து முடிந்திருக்க வேண்டும். மாலை வரை சென்றிருக்காது. நண்பகற் போதிற்குள்ளாகவே முடிந்திருக்கும்.
பொதுவாக, அரசவை கூடுவது காலைப் பொழுதில். அதனால்தான் அது, “நாளவை” [புறம் : 54 : 3], “நாள் மகிழ் இருக்கை” [புறம்: 29:5], “நாளிருக்கை” [சிலம்பு: 23:56, மதுரைக்காஞ்சி: 525], “நாளோலக்கம்” என்றெல்லாம் அழைக்கப்படுகிறது. குடையொடு கோல் வீழ்தல் போலும் தீக்கனாக் கண்டு, வருவதோர் துன்பம் உண்டு என அஞ்சிய கோப்பெருந்தேவி, அத்தீக்கனாத் திறம் உரைக்க அவை புகுந்த போதே, அரசன் அரிமான் ஏந்திய அமளி மிசை இருந்தான் என இளங்கோவடிகளார் கூறியுள்ளார்; அரசவை கூடியிருந்த காலம் காலைப் பொழுதாம் என்பது இதனாலும் உறுதி செய்யப்படும். அரசவை காலைப் போதில் கூடி, அரசியல் பற்றிய அலுவல்களைத் தொடங்குவதற்கு முன்னர், ஆடல், பாடல் நிகழ்வது வழக்கமாகும். ஆடல், பாடல் கண்டும், கேட்டும் இன்புற்றுப் பாண்டியன் மெய்ம் மறந்திருப்பது கண்டு, ஊடல் கொண்டு, அரசவை நீங்கித் தன் மனை சென்று விட்ட கோப்பெருந்தேவியின் சினம் தவிர்ப்பான் வேண்டி, மன்னவன் அவள் மனை நோக்கி விரையும் நிலையில், பொற்கொல்லன் மன்னனைக் கண்டான் என்பதால், அது நிகழ்ந்த காலம் நண்பகலுக்கு முந்தியதாதலே வேண்டும். அந்நேரத்தில் மன்னனைக் கண்ட பொற்கொல்லன், கோவலன் மீது குற்றம் சாட்டலும், அது கேட்டு அரசன் ஆணை பிறப்பித்தலும், ஆணையேற்றுக் காவலருடன் பொற்கொல்லன் தன் மனை புகுதலும், காவலர் மறுத்தலும், பொற்கொல்லன் கள்வர் இயல்பு கூறலும், இறுதியாக ஒருவன் கோவலன் மீது