30
சிலம்பொலி
அடிகளார் பாடியிருப்பர்? கோவலனைப் பிரிந்த இரவே இல்லை; ஆகவே, அவ்விரவில், அவள் உற்ற துயரைப் பாட வேண்டிய நிலை இளங்கோவடிகளார்க்கு வாய்க்கவில்லை.
“கோவலன் கொலையுண்ட செய்தியைத் தெளிவாக அறியு முன்னரே, அதனை அறிவிக்கும் நோக்குடன் தன் எதிரே வந்து திகைத்து நிற்கும் ஆய்ச்சியைப் பார்த்து வாய் விட்டு அரற்றி, அழுகின்றாள் கண்ணகி” (பக்கம்: 138) எனக் கூறி, இச்செய்யுட்களில் வெளிப்படும் கண்ணகி துயரம், குரவை முடிவில் அவள் உற்ற துயரமே என உறுதிப் படுத்தும் ம.பொ.சி., அடுத்த வாக்கியத்தில், இவற்றைக் கோவலனைப் பிரிந்திருந்த முந்திய இரவில் கண்ணகி உற்ற துயரத்தைக் குறிப்பதாகக் கொண்டு மயங்குவது ஏனோ?
மேலே கூறிய பாக்கள், கோவலன் மதுரை சென்ற பிறகு, தனித்திருந்த இரவில் [பக்கம்: 135] கண்ணகி உற்ற துயரைக் குறிக்கின்றன என ஒரிடத்திலும், குரவை முடிவில், [பக்கம் : 136] கோவலன் கொலையுண்டதைக் குறிப்பால் அறிந்து கொண்ட நிலையில், கண்ணகி உற்ற துயரைக் குறிப்பதாக மற்றோரிடத்திலும் கூறும் ம.பொ.சி. அவர்கள், “நண்பகற்போதே நடுக்கு நோய் கைம்மிகும்; அன்பனைக் காணாது அலவும் என் நெஞ்சு அன்றே” என்ற வரிகளும், அவற்றிற்குக், “கோவலன் போன போதே தன் நெஞ்சு கலங்குதலால், நண்பகற் போதே என்றாள்” என அடியார்க்கு நல்லார் எழுதியுள்ள உரையும், கோவலன் சிலம்பு விற்கச் சென்றது முற்பகல் நேரம் என்பதனை உறுதிப்படுத்தும்” [பக்கம் : 138] எனக் கூறி, இப்பாக்கள் கோவலன் விடைபெற்றுச் சென்ற போது, கண்ணகி கலங்கிய கலக்கத்தை உணர்த்துவனவாகவும் கொண்டு மேலும் குழம்பியுள்ளார்.