புலவர் கா. கோவிந்தன்
31
புறஞ்சேரியில் இருந்த போது, மாநகர் காணக் கோவலன் சென்ற போது, கண்ணகி கலங்கவில்லை; காலை முரசம் கனை குரல் எழுப்பச் சென்றவன், மாலைதான் திரும்பினான்; என்றாலும் கலங்கவில்லை. காரணம் வாழும் வகை காணவே செல்கிறான் என்பதால், புதிய இடத்திற்கு முதன் முறையாகச் சென்ற போதே கலங்காதவள், அறிந்த இடத்திற்குச் செல்லும் போது, அதுவும், இவள் கணவன் தந்தை பெயரைக் கேட்ட அளவே, கிடைத்தற்கரிய விருந்தினனாக மதித்துத் தம்மை வரவேற்றுக் கடிமனைப் படுத்தும் நல்லோர் எனக் கௌந்தி அடிகளால், தன் காது கேட்க மாதரியிடம் கூறப்பட்டவர் இடத்திற்குச் செல்லும் போது, அதுவும், சிலம்பு விற்றுப் புது வாழ்வு காணும் முயற்சி மேற்கொண்டு செல்லும் போது கலங்குவதற்குக் காரணமே இல்லை. அவ்வாறாகவும், “கோவலன் போன போதே தன் நெஞ்சு கலங்குதலால் நண்பகற் போதே என்றாள்” என அடியார்க்கு நல்லார் கூறுவது பொருந்தாது. “நண்பகற். போதே நடுங்கும்” என்ற தொடர், நடுங்கிய நேரம், நண்பகற் போது என்பதை மட்டும் உணரத்தான் துணை புரிகிறதே அல்லாது, “கோவலன் போன போதே கலங்கினள்” என்பதை உணர்த்த அத்தொடரில் இடம் இல்லை.
மேலும், ஊர் அரவம் கேட்டு வந்து சொல்லாடாது நின்ற மாதரியைப் பார்த்துக் கலங்கிப் புலம்பும் கண்ணகி, “காதலற் காண்கிலேன்” என்ற காரணத்தைத் தொடக்கத்தில் கூறி விட்டுத்தான் “கலங்கி நோய் கைம்மிகும்” என்று கலங்குவதைக் கூறியுள்ளாள். அது போலவே, அடுத்து வரும் பாக்களிலும், “அன்பனைக் காணாது அலவும்,” “தலைவன் வரக் காணேன்” என வரும் தொடர்கள், சென்ற கணவன் வரக் காணாமையால் கண்ணகி கலங்கினாள் என்பதைத் தெளிவாக உணர்த்துகின்றன. ஆகவே, கண்ணகி கோவலனுக்கு விடை