புலவர் கா. கோவிந்தன்
41
மாதவி கோலத்தையும் ஒப்பு நோக்கின், கடைசியாகக் கோலங் கொண்ட போது அணிந்திருந்த அணிகலன்கள் அவ்வளவையும் கோவலன் மகிழ, முதன் முதலாகக் கோலங் கொண்ட போதும், மாதவி அணிந்திருந்தாள் என்பது தெளிவாகும்.
கடலாடு காதையில் கூறுவது போல், அந்தி மாலைச் சிறப்புச் செய் காதையில் பாதாதி கேசமாக மாதவி அணிந்திருந்த அணிவகைகள் அனைத்தையும் கூறாமல், ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல் மேகலை ஒன்றை மட்டுமே கூறியுள்ளார் ஆசிரியர். அது ஒன்றைக் கொண்டே, கோவலன் உறவு கொள்வதற்கு முந்தைய மாதவியின் செல்வ வாழ்வை உணர்ந்து கொள்ளலாம்.
கானல் வரிப் பாடலுக்கு முன்பாகக், கடலாடச் செல்வதன் முன்னர்க் கோவலன் ஊடல் தவிர்த்துக் கூடல் களிக்கக் கோலங் கொண்ட போது, மாதவி அணிந்து கொண்ட மேகலை முத்துக்களால் ஆனது. “பிறங்கிய முத்தரை முப்பத்து இருகாழ் நிறங்கிளர் பூந்துகில் நீர்மையின் உடீஇ” (கடலாடு 87-88). ஆனால், கோவலனுக்குக் கலவியும், புலவியும் முதன் முதலாக அளித்த போது, அவள் அணிந்திருந்த மேகலை, முத்தினும் உயர்ந்ததான செம்பவளத்தால் ஆனது. “செந்துகிர்க் கோவை சென்றேந்து அல்குல் அந்துகில் மேகலை அசைந்தன வருந்த” (அந்திமாலை 29,30).
ஆக, கோவலன் உறவு கொள்வதற்கு முன்பே, மாதவி பால், பவளத்தால் ஆன மேகலை போலும் மகளிர்க்கு வேண்டும் அணிகள் பலவும் இருந்தன என்பது இவ்வொப்புக் காட்டால் உறுதியாகிறது. ஆகவே கோவலன் மாதவிக்குக் கொடுத்தே வறியனாகி விட்டான்