பக்கம்:சிலம்பொலி.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலவர் கா. கோவிந்தன்

43

கொண்டே, அவன் கூறுவதை மதிப்பிடல் வேண்டும். இது ஆடவர் தம் மனைவியர் முன்னிலையில் வழக்கமாக வாரி வீசும், பரத்தையர் மீதான வசைமாரி.

“அணைபோலும் மெத்தென்ற தோளினை உடையாய்! செய்யாத ஒரு செயலை,நான் செய்ததாகக் கூறிச் சினப்பதற்கு நான் செய்த குறைதான் யாது? என் மீது ஐயுற்று என்னைக் கோபியாதே; தவறு செய்யாதவன் நான் என்பதைத் தெய்வச் சான்றாகக் காட்டவும் செய்கின்றேன்:-

அணைமென் தோளாய்! செய்யாத சொல்லிச்
சினவுவது ஈங்கு எவன்?
ஐயத்தால் என்னைக் கதியாதி, தீது இன்மை
தெய்வத்தால் கண்டி, தெளிக்க”

- மருதக்கலி: 26:6-8.

என்றெல்லாம் தன் மனைவியிடம் கூறுகிறான், பரத்தையர் ஒழுக்கம் மேற்கொண்டிருந்து விட்டுத் தன் மனைக்கு வந்த ஒர் ஆடவன்.

பரத்தையர் ஒழுக்கம் மேற்கொண்டு மனை திரும்பிய மற்றொருவன், மனையாள் ஐயத்தைப் போக்க, “புனைந்து அழகு செய்யப் பெற்ற அழகிய கூந்தலை உடையளாய, என்னோடு தொடர்புடையவளோ என உன்னால் ஐயுறப் பட்டவளோடு, நான் அத்தகைய தொடர்புடையேன் ஆயின், பலியாக உயர்ந்தனவற்றையே கொள்ளும் கொடிய தெய்வம் என்னை வருத்துவதாக!” என அஞ்சாது பொய்ச் சூள் உரைக்கவும் துணிந்துள்ளான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிலம்பொலி.pdf/49&oldid=1776209" இலிருந்து மீள்விக்கப்பட்டது