பக்கம்:சிலம்பொலி.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

44

சிலம்பொலி

உயர்பலி பெறூஉம் உருகெழு தெய்வம்
புனையிரும் கதுப்பின் நீகருத் தோள்வயின்
அனையேனாயின் அணங்கே என்என
மனையோள் தேற்றும்.”

—அகம்: 166:7-10.

பரத்தையர் ஒழுக்கம் மேற்கொண்டிருந்து விட்டு, மனை வந்து, கணவன்மார் பொய்ச் சூள் கூறி, அதை மறைக்க, மறுக்க முயலினும், அவர் தம் மனைவியர், அவர் கூறுவதை நம்புவதில்லை.

நான் அத்தகைய தவறு செய்திலேன் எனக் கூறிய ஒருவனைப் பார்த்து, “பரத்தையர் ஒழுக்கம் கொண்டவன் நொந்து கொள்ளத் தக்கவன்” என்று உன்னை வெறுத்து, உன் ஒழுக்கக் கேட்டை, என் பால் வந்து கூறுவார் இல்லாத போது வேண்டுமாயின், தீதிலேன் நான் என்று என்னிடம் வந்து கூறி, என்னைத் தெளிவிக்க வருக எனக் கணவன் கூற்றை நம்ப மறுக்கும் இல்லத்தரசி ஒருத்தி கூறுவது காண்க.

நோதக்காய் எனநின்னை நொந்தீவார் இல்வழித்
தீதிலேன் யான் எனத் தேற்றிய வருதிமன்.”

—மருதக்கலி: 8: 6-7

பரத்தையர் ஒழுக்கம் அறியேன் எனக் கூறும் கணவன் கூற்றை நம்ப மறுப்பது மட்டுமல்லாமல், அவ்வாறு கூறும் அவனும் பொய்யன், அவனுக்காகத் தூது வரும் அவன் பாணனும் பொய்யன் எனக் கடிந்துரைப்பதும் செய்வர். உன்னைக் காட்டிலும் உன் பாணன் பொய் சொல்வதில் வல்லன். பல பொய்ச் சூள் உரைப்பதிலும் வல்லன். “பாணர் ஊர! நின்னினும் பாணன் பொய்யன்: பல சூளினனே!” (ஐங்குறு நூறு: 43) என்றும், “நீ தூது அனுப்பிய ஒரு பாணன் பொய்யன் என்பது தெளிவாகி விடவே, உன்னால் கைவிடப்பட்ட என் போல்வார்க்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிலம்பொலி.pdf/50&oldid=1776211" இலிருந்து மீள்விக்கப்பட்டது