புலவர் கா. கோவிந்தன்
45
ஊரில் உனக்குத் துணையாய் உள்ள பாணர் அனைவருமே, உனக்குத் துணை போகும் கள்வராகவே தோன்றுகின்றனர். “ஒரு நின் பாணன் பொய்யன் ஆக, உள்ள பாணரெல்லாம் கள்வர் போல்வர், நீ அகன்றி சினோர்க்கே” (குறுந்: 127) என்றும் கூறும் இல்லத்தரசியரும் உள்ளனர்.
அது மட்டுமன்று. பரத்தையர் ஒழுக்கம் கொள்ளும் ஆடவர், தம் ஒழுக்கத்தை அறிந்து கொண்டுள்ளனர் தம் மனைவியர் என்பதை அறிந்ததுமே, அவர் முன் நடுநடுங்கிப் போவர். அவ்வச்ச மிகுதியால் அவர் ஆட்டியபடியெல்லாம் ஆடவும் செய்வர். பரத்தையர் உறவு கொள்ளும் அவ்வாடவர் செயலை உற்ற மனைவியரும், ஊராரும் மட்டுமல்லாமல், அவனோடு உறவு கொண்ட பரத்தையரும் எடுத்துக் கூறி எள்ளி நகையாடுவர்.
ஐவகையாகப் பின்னி ஒப்பனை செய்யப்பட்ட மணம் கமழும் தன் கூந்தலைப் பற்றி உறவும் கொண்டு விட்டு, அழகிய வேலைப்பாடமைந்த தன் கை வளை கழலப் பிரிந்து துயர் செய்தமையால் வெறுப்புற்றுச் சினங் கொண்டு அவனை நோக்கி, “உன் செயலை உன் மனையாளுக்கு இப்போதே சென்று உரைக்கின்றேன் பார்” என்று சொல்லிய அளவில் அந்நல்லவனுக்கு ஏற்பட்ட நடுக்க நிலையை, “நினைந்து நினைந்து நகுகின்றேன் யான்” எனக் கூறி, அவனை எள்ளி நகையாடுகிறாள் ஒரு பரத்தை,
“உள்ளுதொறும் நகுவேன் தோழி!…ஊரன்
தேங்கமழ் ஐம்பால் பற்றி என்வயின்
வான்கோல் எல்வளை வௌவிய பூசல்
சினவிய முகத்துச் சினவாது சென்று,நின்
மனை யோட்கு உரைப்பல் என்றலின்…
நன்னராளன் நடுங்க ஓர் நிலையே!”
(நற்றிணை: 100)