பக்கம்:சிலம்பொலி.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலவர் கா. கோவிந்தன்

51

மாதவி, கோவலன் வறுமையை உணர்ந்திருந்தால், அவன் குறிப்பாகவேனும், தன் வறுமை நிலையைச் சுட்டிக் காட்டியிருந்தால், அவள் அவ்வறுமை போக வழி செய்திருப்பாள்.

கடல் விளையாட்டுக்கான, கோவலன் ஏறிச் சென்ற அத்திரியைத் தொடர்ந்து வையம் என்ற வண்டியேறிச் சென்ற மாதவி, கால் விரல்களில் மகர வாய் மோதிரம்; கால்களில் பாத சாலம், சிலம்பு, பாடகம், சதங்கை, காற் சரி; துடையில் குரங்கு செறி, இடையில் முப்பத்திருகாழ் முத்து வடத்தால் ஆன மேகலை; தோளில் மாணிக்க வளை, பொற்கம்பியில் கோத்த முத்து வளை, முன் கைகளில் மாணிக்கமும் வயிரமும் இழைத்த வளை, பொன் வளை, நவரத்தின வளை, பவழ வளை, சங்க வளை; கை விரல்களில் வாளையின் பிளந்த வாய் போலும் முடக்கு மோதிரம், அடுக்கடுக்காக இரத்தினக் கல் பதித்த அடுக்காழி மோதிரம், மரகதக் கல் இழைத்த மோதிரம்; கழுத்தில் வீர சங்கிலி,நுண்ணிய ஞாண், ஆரம்; புறமுதுகில் கோவை; காதுகளில் நீலக் கல் பொதித்தனவும், வயிரம் பொதித்தனவுமான காதணிகள்; நெற்றியில் தெய்வ வுத்தி முதலாம் தலைக் கோலம் என்ற எண்ணிலா அணிகளை அணிந்தே சென்றுள்ளாள். இவை அனைத்தும் கோவலன் கொடுத்தனவே என வாதத்திற்கு ஏற்றுக் கொள்வோம். எனினும், மாதவிக்குத் தேவை, இவ்வணிகளா? அல்லது கோவலனா என்ற நிலை ஏற்படின், அவள் கோவலனையே ஏற்பள்; அவன் பொருட்டு அவ்வளவு அணிகளையும் இழக்கவே முன் வருவள். அவன் வறுமை நிலையைக் குறிப்பாகவேனும் உணர்ந்திருந்தால், அவ்வறுமை தீர, அவ்வளவையும் அவன் பால் வாரி வழங்கியிருப்பாள். அதில் ஐயம் இல்லை. அது நிகழவில்லை. ஆகவே, அவள் அவன் வறுமையை அறிந்திருக்கவில்லை; அவனும் அவளுக்கு அதைத் தெரிவிக்கவில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிலம்பொலி.pdf/57&oldid=1776235" இலிருந்து மீள்விக்கப்பட்டது