கோவலன் பாடிய கானல் வரிப்பாக்களின் பாட்டுடைத் தலைவி கண்ணகியே எனல் பொருந்துமா?
நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரத்தில் கானல் வரிப் பாக்கள் கருத்தாழ மிக்கவை; பழகப் பழகப் பேரின்பம் பயக்கும் பண்புடையார் நட்பு போல், நயந்து பயிலப் பயிலப் பெருஞ்சுவை தரும் பெருமையுடையன. பன்மொழிப் புலவர், உயர்திருவாளர் தெ. பொ. மீனாட்சி சுந்தரனார் அவர்கள், சென்னை மாநிலக் கல்லூரியில் தமிழ்த் துறைத் தலைவராகப் பணியாற்றிய போது, தமிழ்ச் சிறப்பு வகுப்பு மாணவர்களுக்குச் சிலப்பதிகாரத்தைச் சொல்லிக் கொடுத்த போது, தாமும், மாணவர்களும் பெற்ற விளக்கங்களையெல்லாம், “கானல் வரி” என்ற தலைப்பில், மதுரை, சர்வோதய இலக்கியப் பண்ணை மூலம், ஒரு நூலாக 1961-இல் வெளியிட்டுள்ளார்கள்.
கானல் வரியில் பொதிந்து கிடக்கும் துணுக்கமான பல கருப் பொருள்களை, மிகத் தெளிவாகச் சிக்கல் நீக்கி எடுத்துக் காட்டியுள்ளார். கோவலன் பாடிய கானல் வரிப் பாக்களையும், மாதவி பாடிய கானல் வரிப் பாக்களையும் அடுத்தடுத்து வைத்து ஆராய்ந்து, பாடியவர்களின்