புலவர் கா. கோவிந்தன்
61
என்றால் இல்லை. அப்போதும் அவளின் பேரறிவு—பெருமை மட்டுமே அவன் பார்வையில் பட்டது. “சிறு முதுக் குறைவிக்குச் சிறுமையும் செய்தேன்” (கொலைக் களம்: 68) என்றே அவன் கூறுவது காண்க.
அப்படியாயின், கண்ணகியின் கற்பின் பெருமையைக் கோவலன் கண்டு கொள்ளவே இல்லையா என்றால், உணர்ந்து கொண்டான்; ஆனால், எப்போது? அவன் தன்னை விட்டுப் பிரிந்து போய் விட்டமையால், தான் ஆற்ற வேண்டிய கற்புக் கடமைகளை ஆற்ற மாட்டா நிலை ஏற்பட்டதை நினைவூட்டி, அது ஏற்பட, ஒழுக்கம் கெட்டுத் திரிந்த அவன் செயலைக் கண்ணகி இடித்துக் காட்டிய பின்னரே, அவள் கற்பின் பொற்பினை உணர்ந்தான். அதன் பின்னரே, கண்ணகியின் நாணம், மடம், கற்பு ஆகியவற்றை உணர்ந்தான். “நாணின் பாவாய்! நீணில விளக்கே! கற்பின் கொழுந்தே!” (கொலைக்களம்: 90-91) என்றெல்லாம் பாராட்டினான்.
ஆக, கண்ணகியின் கற்பு நலத்தைக் கொலைக் களம் நோக்கி அடியிடுவதற்குச் சில நாழிகைக்கு முன்னர்தான் கோவலன் உணர்ந்து கொண்டான். அங்ஙனமாகவும், கண்ணகி கற்பு நலத்தைக் கோவலன், மாதவி உறவு கொள்வதற்கு முன்பே, உணர்ந்து அனுபவித்ததாகவும், அந்த அனுபவத்தையே, கானல் வரிப் பாக்களில், காவிரியைக் கண்டதும், வரி வடிவில் வடித்துக் காட்டினானாகவும் கூறுவது அறவே பொருந்தாது.
கோவலன் பாடிய கானல் வரிப் பாக்களின் பாட்டுடைத் தலைவி கண்ணகியாயின், கானல் வரி இறுதியில் மாதவியை வெறுத்துப் பிரிந்த கோவலன், அடுத்த கணம் தன் உள்ளத்தில் ஆட்கொண்டிருந்த கண்ணகியை அடைந்திருக்க வேண்டும். கடற்கரையிலிருந்து நேரே,