68
சிலம்பொலி
தவறியிருக்கத் தேவையில்லை. ஆனால், அவற்றை இழந்து விட்டதாகக் கூறுகிறாள். அதுவும் கோவலனிடமே கூறுகிறாள். ஆக, அது இழப்பதற்கு அவன் வாராமையையே காரணமாகக் கூறுகிறாள் கண்ணகி. அது இழந்ததைக் கூறி அவன் வாராமையை, மறைமுகமாகச் சுட்டிக் காட்டுவது மட்டுமல்லாமல், தன் முன் வந்து நில்லா அவன் செயலை, “என்முந்தை நில்லா முனிவு” [கொலைக்களம் : 76] என வெளிப்படையாகவும் எடுத்துக் கூறியுள்ளாள். ஆகக், கண்ணகி கூற்றாலும், கோவலன், இடைக்காலத்தில், தன் மனைக்குச் சென்று வந்தவனல்லன் என்பது தெளிவாகிறது.
மேலும், கண்ணகியின் பார்ப்பனத் தோழி தேவந்தி, கண்ணகி நல்லாளுக்கு உற்ற குறையொன்று உண்டு என உணருகிறாள். அது, கணவனைப் பெறாக்குறையென்றும் உணருகிறாள். அதனால், “பெறுக கணவனோடு” என வாழ்த்துகிறாள். அவள் வாழ்த்துக்கு எதிராகத் தான் கண்ட தீக்கனாவைக் கூறித் தன் நடுக்கத்தைக் கண்ணகி வெளிப்படுத்தினாளாக, தேவந்தி, பிரிந்த கணவரை, மகளிர் பெறுதற்காம் வழி முறையாக, சோமகுண்டம், சூரிய குண்டம் மூழ்கிக் காமவேள் கோட்டம் தொழுவதைக் கூறி, அவற்றில் யாமும் ஒரு நாள் ஆடுவாம் என்கிறாள்.
“சோமகுண்டம் சூரிய குண்டம் துறைமூழ்கிக்
காமவேள் கோட்டம் தொழுதார், கணவரொடு
தாம் இன்புறுவர் உலகத்துத் தையலார்;
போகம்செய் பூமியினும் போய்ப்பிறப்பர்; யாம்ஒருநாள்
[கனாத் திறம் : 59-63]
ஆக, கண்ணகி கோவலனை உடன் பெற்றிருக்கவில்லை; அவன் ஒரு நாளும் கண்ணகி மனைக்கு வந்திலன்