பக்கம்:சிலம்பொலி.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலவர் கா. கோவிந்தன்

69

என்பதை அறிந்திருந்ததினாலேயே, தேவந்தி, “பெறுக! கணவனை” என்றும், அது பெற, “ஒருநாள் குண்டம் ஆடிக் கோட்டம் தொழுவாம்” என்றும் யோசனை கூறியுள்ளாள்.

நாள் தோறும் பார்த்திருக்கும் ஒருவரை, எத்துணை நெடுந்தொலைவில் கண்டாலும் எளிதில் அடையாளம் கண்டு கொள்ளலாம். ஒருவர் எத்துணைதான் நெருக்கமானவராயினும், அவரைப் பல்லாண்டு காலம் காணாதிருந்து, ஒரு நாள் திடுமெனக் காண நேர்ந்தால், கண்ணுற்றவுடனே, அவரை அடையாளம் கண்டு கொள்வது இயலாது. தன் மனைக்குச் சென்றுள்ளான் கோவலன். அம்மனையில் பணி புரியும் குற்றிளையாள், அவனைக் கண்டவுடனேயே அடையாளம் கண்டு கொண்டிலள். காவலன் போலும் எனத் தொடக்கத்தே ஐயுறுகிறாள். சிறிது கழித்தே அவனைக் கண்டு கொள்கிறாள். “காவலன் போலும் கடைத் தலையான் வந்து நம் கோவலன் என்றாள் ஓர் குற்றிளையாள்” |கனாத்திறம் : 65-66] என்ற இளங்கோவடிகளார். வரிகளையும், “தூரத்தே பார்த்து ஐயுற்று நம் காவலன் போலும் என்று, அவன் அணுகினவிடத்து ஐயம் தீர்ந்து கோவலன் என்றாள்” என்ற அரும்பத உரைகாரர், அடியார்க்கு நல்லார் ஆகிய இருவர் உரை விளக்கத்தையும் காண்க. கோவலன் தன் மனைக்கு வழக்கமாக வந்து கொண்டிருந்திருந்தால், குற்றிளையாளுக்கு அம்மயக்கம் நேர்ந்திருக்காது. அவன் பல்லாண்டு காலம், அம்மனைப் பக்கமே வராதிருந்து விட்டுத் திடுமென வந்து நிற்கவேதான் அவளுக்கு அம்மயக்கம் நேர்ந்தது.

மகளிர்க்கு மேனி வாடுவது, கணவர் பிரிவால் ஒருவரின் மேனி வாட்டம் காண்பவர் கண்ணை உறுத்துமளவு ஒரே நாளில் திடுமெனப் பெருகி விடுவதில்லை. பல நாட்கள், பல திங்கள், பல ஆண்டுகளாக அவ்வாட்டம்

சில—5

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிலம்பொலி.pdf/75&oldid=1778615" இலிருந்து மீள்விக்கப்பட்டது