70
சிலம்பொலி
மெல்ல மெல்ல வளர்ந்தே பெருகித் தோன்றும். மேனி வாடும் ஒருவரை நாள்தோறும் கண்டு வருவார்க்கு, அவ்வாட்டம் வாடுவாரைக் கண்ட அளவே, கலங்குறச் செய்து விடுவதில்லை. அவரை, நெடுங்காலம் காணாதிருந்து, ஒரு நாள் திடுமெனக் காண்பவர்க்கே அவ்வாட்டம் கண்ணை உறுத்துமளவு கொடிதாகத் தோன்றி வருத்தமுறச் செய்யும். கோவலன் வழக்கமாக வந்து கொண்டிருந்தால், கண்ணகிக்கு மேனி வாட்டமே நேர்ந்திருக்காது. வேறு காரணத்தால் மெல்ல மெல்ல மேனி வாடி வந்திருக்குமாயின், அது அவளை வழக்கமாகக் கண்டு வந்திருப்பனாயின், அவன் கண்ணைக் கலக்கியிருக்காது. அவன், அவளைப் பல்லாண்டு காலமாக, அறவே மறந்து விட்டு, ஒரு நாள் திடுமெனச் சென்று காணவேதான் அந்நெடும் பிரிவு அளித்த அவள் மேனி வாட்டம் அவன் கண்ணைக் கலக்குவதாயிற்று. “வாடிய மேனி வருத்தம் கண்டு” [கனாத்திறம் : 68] என்கிறார் ஆசிரியர்.
ஆக, இது காறும் கூறியவற்றால், மாதவி மாலை வாங்கி அவள் மண மனை புகுந்தது தொட்டு, கடற்கரைக் கண், அவள் பாடிய கானல் வரிப் பாட்டால் அவளை வெறுத்து விடுத்து, மீண்டும் தன் மனை புகும் வரை, கோவலன் தன் மனைக்கு ஒரு நாளும் சென்றவனல்லன்; ஆகவே, அவன் வழக்கமாகக் கண்ணகியின் வீடு சென்று, பொருள்களைக் கொணர்ந்து கொடுத்து வந்தான், அதை மாதவியும் உணர்ந்திருந்தாள் என்ற கூற்றில் சிறிதும் உண்மையில்லை என்பது உறுதியாயிற்று.