74
சிலம்பொலி
அரங்கேற்றக் காதையில் கூறப்படும் அவள் ஆடல், அரசவைக் கண், அரசன் காண, முதன் முதலில் அரங்கேறி, அரசர்க்காகவே ஆடிய வேத்தியல் கூத்து ஆகும். அந்த ஆடலையும், ஆடற்கலைக்குத் துணை நிற்கும் ஆடலாசிரியன், [“ஆடற்கு அமைந்த ஆசான்” (25)] இசையாசிரியன், [“அசையா மரபின் இசையோன்” (36)] புலவன், [“நாத்தொலைவு இல்லா நன்னூற்புலவன்” (44)] தண்ணுமை ஆசிரியன், [“தண்ணுமை அருள் தொழில் முதல்வன்” (55)] குழலோன் [“வழுவின்று இசைக்கும் குழலோன்” (69)] யாழ் ஆசிரியன், [“புலமையோன்” (94)] ஆகிய இவர்களேயல்லாமல், ஐம்பெருங் குழுவைச் சார்ந்த அமைச்சர், புரோகிதர், சேனாபதியர், தூதுவர், சாரணர் ஆகியோரும் கண்ணுற்றனர் [“அரைகொடு பட்ட ஐம்பெரும் குழுவும்” (126)] எனத் தெளிவாகக் கூறியுள்ளார் அடிகளார்; ஆகவே, ஆடலை யாரெல்லாம் கண்டனர் என்பதை அடிகளார் குறிப்பாகவும் கூறவில்லை. ஆகவே, கோவலன் கண்ணுற்றதை நேரே கூறவில்லை என்ற வாத வலுவில், கோவலன்,அவள் ஆடலைக் கண்டு, அக்கலையால் ஈர்ப்புண்டே அவள் மனை புகுந்தான் என முடிவு கொள்வது முறையாகாது.
அரசர் நிகர் வாழ்வுடையான், அரசர்க்கு அடுத்து வைத்து மதிக்கத் தக்க வணிகர் குடி வந்தவனேனும், கோவலன், அரசவைக் கண் இருந்து, மாதவி ஆடலைக் கண்ணுற்றவன் அல்லன். வாழ்நாளில், அரசவைக்கு அணித்தாகச் செல்வதை ஒரு நாளும் செய்தறியான் கோவலன், நாள் தோறும் சென்று பழகும் இடங்களாக, அடிகளார் கூறும், விளையாட்டிடமாம் பொழில், நாள் மகிழ் இருக்கையாம் நாளங்காடி, நிறை காமப் பேச்சுப் பேசும் நகையாடாயம், பாணர், பரத்தர் இருப்பு, நகர நம்பியர் திரிதரு தெருவு ஆகியவற்றில், அரசவை இடம் பெற்றிலது அறிக.