புலவர் கா. கோவிந்தன்
79
கோவலனும், கண்ணகியும், இரவோடிரவாகப் புகார் நகர் விட்டுப் போய் விட்ட செய்தியையும், அஃதறிந்து, அவ்விருவரின் இரு முதுகுரவர்களும் அப்போது உற்ற துயர்க் கொடுமையினையும் அறிந்த அளவே, மாதவி மேனி பசந்து விட்டது. ஒன்று, பலவாகப் பெருகும் நோய்க்கு ஆளாகி விட்டாள். மாதவியின் இந்நிலையைப்,
“பெரும்பெயர் மூதூர் பெரும் பேதுற்றதும்
வசந்த மாலைவாய் மாதவி கேட்டுப்
பசந்த மேனியள் படர்நோய் உற்று”
என [புறஞ்சேரி: 66-68] கோசிகமாணியின் வாய் வழியே இளங்கோவடிகளார் விளங்கக் காட்டுவது காண்க.
பிரிவுத் துயர் இத்தகைத்து என்பதைத் தான் அறிந்து கொண்டவுடனேயே, கோவலன் தன் மனையகத்தே இருந்த காலத்தில், கண்ணகி எத்துணைத் துயர் உற்றிருப்பாள் என எண்ணிப் பார்த்தாள் மாதவி. தன்னைக் கடற்கரைக் கண் விட்டுச் சென்ற சிறிது நேரப் பிரிவுத் துயரையும் பொறுக்க மாட்டாது, வயந்தமாலை பால் கடிதம் கொடுத்துக் கோவலனைத் தன் பால் ஈர்த்துக் கொள்ள முயற்சித்த தன் போல் அல்லாமல், கோவலன் அத்தனை ஆண்டுக் காலம் கண்ணகியை விடுத்துத் தன் பாலே இருந்து விடவும், அவனைத் தன் மனைக்கு அழைத்துக் கொள்ள ஒரு முறையேனும் முயற்சி செய்யாது, பிரிவின் கொடுந்துயரைப் பொறுமையாகத் தாங்கி நின்ற கண்ணகியை நினைந்து பார்த்தாள். அவ்வளவே. அவள் பெருமையை உணர்ந்தாள். கோவலனைத் தன் பாலே கொண்டு விட்டு, அப்பெருமைக்குரியாளுக்குத் தான் விளைத்து விட்ட கொடுந் துயர்க்கு—தான் செய்த அப்பெரும் பிழைக்கு வருந்தினாள். அப்பிழை பொறுக்குமாறு வேண்டிக் கொள்ளவும் துடித்தாள். அவ்வளவே. கோசிகமாணி பால் கொடுத்த கடிதத்தில், கண்ணகி புகழ் பாடியதோடு, தன் பிழைக்கு மன்னிப்பும்