கோவலன் உணர்ச்சிக்கு அடிமைப்பட்டு அதன் வழிச் செயல்படுபவனே ஒழியச் சிந்தித்துச் செயல்படுபவன் அல்லன்!
சிலம்பை விற்றுப் பெறும் பொருளை முதலாகக் கொண்டு, இழந்த பொருள் ஈட்ட, மதுரை சென்ற கோவலன் எண்ணம், மதுரையில் தன்னொத்த வணிகர்களைக் கண்டு, அவர் துணை கொண்டு, தொழில் ஆற்ற வேண்டும் என்பதுதான்.
“சிலம்பு முதலாகச் சென்ற கலனோடு
உலந்த பொருள் ஈட்டுதல் உற்றேன், மலர்ந்த சீர்
மாடமதுரை அகத்துச் சென்று…”
கனாத்திறம்:74-76
புகார் நகர் விடுத்து, மதுரை செல்லும் தன் குறிக்கோள் இதுதான் என்றே கண்ணகியிடம் தெளிவாகக் கூறினான்.
“பழம்பெரும் நகராம் மதுரையில், அரசர்க்கு அடுத்து வைத்து மதிக்கத்தகும் என் குல வணிகர்கள்பால் என் நிலை, நான் வந்திருக்கும் குறிக்கோள் குறித்துக் கூறி, ஆவன செய்து வருங்காலும், இவளைத் தங்கள் பாதுகாப்பில் விட்டுச் செல்கின்றேன்” என்றுதான் கௌந்தி அடிகளிடம் கூறி விடை கொண்டான்.
“தொன்னகர் மருங்கின் மன்னர் பின்னோர்க்கு
என்நிலை உணர்த்தி யான் வருங்காலும்
பாதக் காப்பினள் பைந்தொடி.”
ஊர்காண்: 21-23