பக்கம்:சிலம்பொலி.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

84

சிலம்பொலி

குறிக்கும் என்பதை, முறுக்கேறிய உடலினராகிய கீழோர் வண்டுகள் மொய்க்கும் புதுக் கள் உண்ட நிலையில், பெய்யும் மழையினையும் பொருட்படுத்தாது, மேலாடை நெகிழ்வதும் நினைவிலராய்ப், பகல் கடந்த காலத்தும், நகரில் சென்றலையும் செயலைக் குறிப்பிடுங்கால், நெடுநல்வாடை, “திரிதர” என்ற சொல்லால் குறிப்பிடுவது, உறுதி செய்வது காண்க.

முடலை யாக்கை முழுவலி மாக்கள்,
வண்டுமூசு தேறல் மாந்தி மகிழ்சிறந்து
துவலைத் தண்துளி பேணார், பகல்இறந்து
இருகோட்டு அறுவையர் வேண்டுவயின் திரிதர.”

—நெடுநல் : 32-35

பிறந்த மண்ணில் வாழ்விழந்து போவதற்குக் காரணமாய் இருந்த பாணரோடும், பரத்தரோடும் திரியும் பழக்கம் வாழ்வு தேடி வந்த இடத்திலும், கோவலனை விடவில்லை போலும்!

கௌந்தி அடிகளிடம், சென்று வந்த செய்திகளைக் கூறிய போதும், மதுரையின் மாண்பு, அம்மாநகர் ஆளும் மன்னவன் கொற்றம் இவை பற்றித்தான் கூறினானே ஒழிய, வணிகர்களைக் கண்டது பற்றிக் கூறவில்லை. காரணம், வணிகர்களை அவன் பார்க்கவில்லை.

“தீதுதீர் மதுரையும் தென்னவன் கொற்றமும்
மாதவத் தாட்டிக்குக் கோவல்ன் கூறுழி”

என்ற வரிகளைக் காண்க. (அடைக்கலம் : 9-10)

கோவலனின் இப்போக்கு, கௌந்தி அடிகள் உள்ளத்தைப் பெரிதும் வருத்தியுளது வழியிருந்தும் வாய் இல்லாமையால், இவன் வருந்த நேருமோ, என அஞ்சி-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிலம்பொலி.pdf/90&oldid=1779841" இலிருந்து மீள்விக்கப்பட்டது