பக்கம்:சிலம்பொலி.pdf/95

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலவர் கா. கோவிந்தன்

89

புரியும் நிலையில் கண்டனனா என்றால், அதுவும் இல்லை. தெரு வழியே வந்து கொண்டிருக்கும் நிலையில், தெருவு இடையே நிறுத்தியே விலை பேசத் தொடங்கி விட்டான்.

“வேந்தற்கு விளம்பி யான் வர என் சிறுகுடில் ஆங்கண் இருமின்” எனக் கூறிச் சென்ற பொற்கொல்லன், மீண்டு வந்து, “சிலம்பு காணிய வந்தோர் இவர்” என, உடன் கொண்டு வந்த கொலையாளிகளை அறிமுகம் செய்து வைத்த போதும், அவர்களை ஐயுறுதற்கேற்ற சிந்தனைத் தெளிவு கோவலனுக்கு உண்டாகவில்லை.

“இலக்கண முறைமையின் இருந்தோன் சங்கிவன் கொலைப்படு மகன் அலன்” எனக், கொலையாளிகளில் ஒருவன் கூறிய போதும், பொற்கொல்லன் குடிலில், கொலை பற்றிய பேச்சு, சிலம்பு காண வந்தோன் வாயில் வருவானேன் என்ற சிந்தனை கோவலனுக்குத் தோன்றவில்லை. -

கொலையாளிகளைத் தன் வழிக்குக் கொணர்வான் வேண்டிக், கள்ளர்களின் பல்வேறு திறமைகளை, விரிவான வகையில் பொதுவாகவும், இளங்கோ வேந்தன் கழுத்தாரத்தைக் களவாடிய கள்வன் ஒருவனின் தனித் திறமையைக் குறிப்பாகவும்,பொற் கொல்லன் கூறுவதும், பொற் கொல்லனின் அச்சொல் வன்மையால் ஈர்க்கப் பட்டு விட்ட கொலையாளிகளில் ஒருவன், தான் கண்ட கள்ளன் ஒருவனின் திறத்தை விளக்குவதும் ஆகிய, சிலம்பு வாணிகத்தோடு சிறிதும் தொடர்பில்லாத சொல்லாடல்கள் நெடும் பொழுது நிகழ்ந்திருந்த நிலையிலும், கோவலன் சிந்தனை செயல்பட்டிலது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிலம்பொலி.pdf/95&oldid=1779850" இலிருந்து மீள்விக்கப்பட்டது