பக்கம்:சிலம்பொலி.pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

“மாதவி மனை புகுந்த கோவலன், தன் மனையை அறவே மறந்து விடவில்லை” எனல் பொருந்துமா?

1.

மாமலர் நெடுங்கண் மாதவி மாலை
கோவலன் வாங்கிக் கூனி தன்னொடு
மணமனை புக்கு மாதவி தன்னொடு
அணைவுறு வைகலின் அயர்ந்தனன் மயங்கி
விடுதல் அறியா விருப்பினன் ஆயினன்
வடுநீங்கு சிறப்பின் தன்மனையகம் மறந்து”

என அரங்கேற்றுக் காதையில் [170-175] கூறியதன் மூலம், கோவலன் மாதவி பால் விடுதல் அறியா விருப்பம் உடையவனாகி விட்டமையால், தன் மனையகத்தை அறவே மறந்து விட்டான் எனக் கூறப்பட்டாலும், அவன் தன் மனை வாழ்க்கையை மறந்தவனல்லன் என்பதற்கான அகச் சான்றுகளும் உள்ளன என வாதிடுவாரும் உள்ளனர்.

2. பிள்ளை நகுலத்திற்கு அறியாதே கேடு புரிந்து, கணவனால் கைவிடப்பட்டு, அப்பழி தீர, அவன் கொடுத்த வடமொழி வாசகம் எழுதிய ஏட்டை வாங்கும் தகுதியுடையாரைத் தேடத் தொடங்கிய பார்ப்பனி, புகார் நகரத்துப் பீடிகைத் தெருவில் பெருங்குடி வாணிகர் மாடமறுகில் சென்றே மனைதொறும் புகுந்து புகுந்து கேட்டாளாக, அவளை அணுகக் கூவி, அவள் குறை கேட்டு, அவ்வேடு வாங்கி, அவள் பழி தீர்த்தான் கோவலன் என்கிறான் கோவலனின் வாழ்க்கை முறைகளையெல்லாம் உணர்ந்த அவன் பார்ப்பன்த் தோழன் மாடல மறையோன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிலம்பொலி.pdf/96&oldid=1776134" இலிருந்து மீள்விக்கப்பட்டது