92
சிலம்பொலி
சென்றுள்ளான். அவன் அங்கு வழக்கமாக இருப்பதை அறிந்திருந்ததனாலேயே வசந்தமாலையும், கடிதத்தை எடுத்துக் கொண்டு நேரே கடை வீதிக்கே சென்றுள்ளாள். ஆக, மாதவியொடு தொடர்பு கொண்ட கோவலன், தன் மனையை அறவே மறந்து விட்டவனல்லன்; மாதவி மனையில் வாழ்வது போலவே, தன் மனையிலும் வாழ்ந்திருந்தான் என்பது, இதனாலும் தெளிவாகிறது என்பர்.
ஆனால், மாதவியின் மாலை வாங்கி, அவள் மனை புகுவதற்கு முன்னர்க், கோவலன் கண்ணகியொடு தன் மனையகத்தே சில ஆண்டுகள் இருந்து இல்லறம் ஆற்றியுள்ளான். “யாண்டு சில கழிந்தன இற்பெரும் கிழமையின், காண்டகு சிறப்பின் கண்ணகி தனக்கு” (மனையறம் படுத்த காதை: 89 - 90) என்ற வரிகளைக் காண்க.
பிள்ளை நகுலத்திற்கு அறியாதே கேடு புரிந்தாளின் பழி தீர்த்த கோவலன் செயல், அந்தச் சில ஆண்டுகளில் நிகழ்ந்ததாகக் கொண்டு விட்டால், அந்நிகழ்ச்சியைச் சான்று காட்டிக் கோவலன், மாதவியோடு இருந்த காலத்திலும், தம் மனையை அறவே மறந்தவன் அல்லன் எனக் கொள்ளும் முடிவு வலுவற்றுப் போய் விடுகிறது.
இத்தடைக்குக், “கோவலனின் இப்பண்பு நலத்தைக் கூறிப் பாராட்டும், அவன் பார்ப்பனத் தோழன் மாடல மறையோன், இந்நிகழ்ச்சியை, மணிமேகலையின் பெயர் சூட்டு விழாவின் போது, கோவலன், களிறு அடக்கி மறையோனைக் காத்த செயலை அடுத்தே வரிசைப்படுத்தியுள்ளான் ஆதலின், இதைக் கண்ணகியோடு வாழ்ந்த சில ஆண்டு காலத்தில் நிகழ்ந்த நிகழ்ச்சியாகக் கோடல் கூடாது. மாதவி உறவு கொண்ட பின்னர் நிகழ்ந்த அருஞ் செயலாகவே கொள்ளுதல் வேண்டும்” என விடை அளித்து விடுவர் அவர்,
“மனையகம் மறந்தான்” (அரங்கேற்றுக் காதை : 175)