பக்கம்:சிலம்போ சிலம்பு.pdf/127

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிலம்போ சிலம்பு!

123


குறிக்குப் பதில் சொல்ல முடியாவிட்டால், "அடேய், என்னைச் சோதிக்கிறாயா - ஆமாம் அடேய் என்னைச் சோதிக்கிறாயா? - நான் மலை ஏறப் போறேன்டா - நான் மலை ஏறப் போறேன்டா என்று கூறி மலையேறி விடுவதும் உண்டு. சூழ்நிலைக்கு ஏற்ப உணர்ச்சி வயப்பட்டுச் சிலர் சாமியாடுவது ஒருவகை (இசுதீரியா என்னும்) நோய் என்று அறிவியலார் கூறுவதாகத் தெரிகிறது. இது குறித்து மேலும் ஆராய்ந்த பின்னரே ஒரு முடிவுக்கு வரமுடியும்.

மற்றொரு மரபையும் இவண் சொல்லாமல் விடுவதற்கு இல்லை. பெரியோர்களிடமோ - மன்னரிடமோ ஒருவர் ஏதேனும் சொல்லத் தொடங்கின் முதலில் வாழ்த்து கூறுவது வழக்கம். சொல்லி முடித்தபின் இறுதியிலும் வாழ்த்து கூறுவதும் உண்டு. சிலப்பதிகாரத்தில் இந்த மரபு சில இடங்களில் பின்பற்றப்பட்டுள்ளது.

வழக்கு உரைக்கக் கண்ணகி வந்திருப்பதைப் பாண்டிய மன்னனிடம் அறிவிக்க வந்த வாயில் காப்பாளன் முதலில் "வாழிஎம் கொற்கை வேந்தே வாழி" (20:30) என்று வாழ்த்து சொல்லியே பேச்சைத் தொடர்ந்தான்.

தேவந்தி செங்குட்டுவனிடம் மணிமேகலையைப் பற்றிச் சொல்லத் தொடங்குமுன்,

"கோமகன் கொற்றம் குறைவின் றோங்கி
நாடு பெருவளம் சுரக்க"
(30:6, 7)

என வாழ்த்தினாள்.

மலைவாழ் மக்கள் செங்குட்டுவனிடம் கண்ணகியைப் பற்றிக் கூறத் தொடங்கியபோது,

"ஏழ்பிறப்பு அடியேம் வாழ்க நின்கொற்றம்" (25:56)

என்று வாழ்த்திச் செய்தியைக் கூறி, முடிக்கும் போதும்

"பன்னுா றாயிரத் தாண்டு வாழியர்" (25:63)