பக்கம்:சிலம்போ சிலம்பு.pdf/138

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

134

சுந்தர சண்முகனார்



கடலாடு காதையில், கடற்கரைப் புனைவு உள்ளத்தைத் தொட்டு மகிழ்விப்பதாகும்.

ஊர் காண் காதையில், மதுரை மாநகர் சொல்லோவியமாகத் தீட்டப்பட்டுச் சிறந்துள்ளது.

புகார்ப் புனைவும், மதுரைப் புனைவும் இயற்கைக் காட்சிகள் அல்லவாயினும், அப்பெரு நகரங்களில் இன்னின்னவை இருக்கலாம் என இளங்கோ அடிகள் கற்பனைக் கண்ணால் கண்டே புனைவு செய்திருக்க வேண்டும்.

அந்தி மாலைப் புனைவு:

சிலம்பில் அந்தி மாலைச் சிறப்புச் செய் காதையில் அந்தி மாலை நன்கு புனையப்பட்டுள்ளது.

அந்தியில் ஞாயிறு மறைந்தது. நிலமகள் ஞாயிறாகிய கணவனைக் காணாது வருந்தினாள். அடுத்து, கடலை ஆடையாக உடைய அந்த நிலமகள் திங்களாகிய செல்வனையும் காணாமல், நான்கு திசைகளிலும் முகம் பசந்து நெஞ்சம் பணித்துச் சுழன்றாள். அந்தி மாலையில் ஞாயிற்றின் ஒளி மறைந்து திங்கள் ஒளி வீசத்தொடங்கும் வரையும் சிறிது இடை வெளி இருக்கும். அந்தநேரமே இவ்வாறு புனையப்பட்டுள்ளது. 'முகம் பசந்து நெஞ்சம் பனித்து' என்பது இருபொருள் அமையப்பாடப்பட்டுள்ளது.

"திசைமுகம் பசந்து செம்மலர்க் கண்கள்
முழுநீர் வார முழுமெயும் பணித்து"
(4:5, 6)

என்பது பாடல் பகுதி. ஞாயிறு மறைந்ததால் திசையாகிய முகம் பசந்தது; மலராகிய கண்கள் நீர் சொரிந்தன - அதாவது, மலர்கள் தேனைச் சொரியலாயின. நிலம் பனி நீரால் நனையத் தொடங்கியது - என்பது கருத்து.